இவ்வாறு நிலவரித்திட்டப் பணிகள் மறுகுடியமர்த்தப்பட்ட கிராம நிலங்களில் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் 26.05.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டு சுமார் 3,000 குடும்பங்கள் பயனடையும் வகையில் வருவாய் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி, விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நிலவரித் திட்ட அலகு ஏற்படுத்தப்பட்டு நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக நிலஎடுப்பு செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விஜயமாநகரம் கிராமத்தில் 2676 நபர்களுக்கு 1371 பட்டாக்களும், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 867 நபர்களுக்கு 475 பட்டாக்களும், என மொத்தம் 3,543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.
வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கூட்டரங்கக் கட்டடத்தை திறந்து வைத்தல் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் மற்றும் கிள்ளியூரில் 7 கோடியே 50 இலட்சத்து 94 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3 கோடியே 75 இலட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 கோடியே 60 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூட்டரங்கக் கட்டடம், என மொத்தம் 14 கோடியே 86 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, பொதுமக்களின் வசதிக்காக ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நிலஅளவை செய்ய விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை/வரைபடம்’ ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
The post வருவாய்த் துறை சார்பில் ரூ.14.86 கோடி செலவிலான கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.