அரியன்வாயல் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் சமரசம்

பொன்னேரி: அரியன்வாயல் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை 2வது வார்டு பகுதியான அரியன்வாயல் உள்ள ஜெகன் நகர் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குடியிருப்பு கூட்டமைப்பு நலசங்கத்தினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரியன்வாயல் பகுதியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வேறு இடத்தில் குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், குப்பையால் நிலத்தடி மாசடைந்து வருகிறது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராம்நாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், மக்கள் கூட்டமைப்பு தலைவர் ஷேக் முகமது, ஜெகன்நகர் குடியிருப்பு தலைவர் பாபு ராஜேஷ், நிர்வாகிகள் இளங்கோ, அசார், கிருஷ்ணசாமி, முகமது தாரிக், விவசாய சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன், கதிர்வேல், விநாயகமூர்த்தி மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, குப்பை கொட்ட மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

The post அரியன்வாயல் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: