திருமலை: ஐதராபாத்தில் குடும்பத்துடன் செல்பி எடுத்தபோது கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட இளம்பெண் 45 நிமிடம் போராடி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் மாலை காரில் சென்றனர். செல்லும் வழியில் நல்கொண்டா மாவட்டம் வெமுலபள்ளியில் நாகார்ஜூனா சாகர் அணையின் இடது கரை கால்வாயில் காரை நிறுத்தினர்.
இந்த கால்வாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் சீற்றத்துடன் செல்கிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அதனை கண்டு ரசித்தனர். அப்போது குடும்பத்தை சேர்ந்த இளம்பெண், வெமுலப்பள்ளி பாலத்தில் உள்ள இடது கால்வாய் அருகே ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது குடும்பத்தினர் அனைவரையும் நிற்க வைத்த அவர், செல்பி எடுக்க முயன்றபோது, திடீரென கால் தவறி தண்ணீரில் விழுந்து அடித்துச்செல்லப்பட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டனர். உடனடியாக இதை கவனித்த அப்பகுதி மக்கள் கால்வாயில் குதித்து அந்த பெண்ணை கயிற்றால் கட்டி சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். தண்ணீரில் விழுந்த பெண்ணுக்கு காயங்கள் ஏதும் இல்லாததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
The post அணை பகுதியில் நின்று செல்பி எடுத்த போது தண்ணீரில் தவறி விழுந்த இளம்பெண்: 45 நிமிடம் போராடி பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.