×

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாரிடம் 7 மணி நேரமாக விசாரணை!

டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஆஜரான த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாரிடம் 7 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன் என்று த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் நடைபெற்றது. இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் நடிகர் விஜய் தாமதமாக வந்ததும், சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டதும் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பான வழக்கை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையைக் கண்காணித்து வருகிறது.

இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே கரூரில் விசாரணை நடந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசாரக் குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர்.

அப்போது பிரசார ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். குறிப்பாக 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடியது குறித்தும், அனுமதி மீறல் குறித்தும் அவர்களிடம் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் சிபிஐ அதிகாரி சுனில் குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் பரப்புரைக்கு த.வெ.க. சார்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன?. பரப்புரை கூட்டத்துக்கு விஜய் எப்போது வருவதாக இருந்தது?. கரூர் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்?. விஜய் வருவதில் தாமதம் ஏதும் இருந்ததா, அவ்வாறு இருந்தால் அதற்கான காரணம்?. திட்டமிடப்பட்ட நேரத்தில் பரப்புரை கூட்டம் நடைபெற்றதா? என சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கூட்டத்துக்கு த.வெ.க. அனுமதி கோரிய கடிதம், வீடியோ ஆதாரங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாரிடம் 7 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Delhi ,CPI ,Administrators ,N. Anand ,Adav Arjuna ,Nirmal Kumar ,Karur ,CBI ,K. ,
× RELATED கோயில்களில் முதல் மரியாதை என்பது...