×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கலியுக வைகுண்டமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அன்றைய நாள் முதல் தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் அதன் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளை (30ம் தேதி) அதிகாலை நடைபெற உள்ளது. அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நாளை முதல் வரும் ஜனவரி 8ம் தேதி நள்ளிரவு வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தொடர்ந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி நாளை முதல் ஜன.1ம்தேதி வரை 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்து குலுக்கல் மூலம் தேர்வாகி டோக்கன் பெற்ற 1.80 லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில் நாளை அதிகாலை முதல் சொர்க்கவாசல் டோக்கன் வைத்துள்ள பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி கிருஷ்ணதேஜா ஓய்வறை அருகே காலை நுழைவுவாயிலும், ஆழ்வார் ஏரி அருகே மதிய நுழைவாயிலும், சிலாதோரணம் அருகே இரவு நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக கோயிலுக்குள் பக்தர்கள் வரவழைக்கப்பட்டு தரிசனம் செய்து வைத்து பின்னர் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

சொர்க்கவாசல் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அவ்வப்போது பால், காபி, பிஸ்கட், உணவு பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் நாளை முதல் 1ம் தேதி வரை பக்தர்கள் எண்ணிக்கையை பொறுத்து எவ்வித டோக்கன் இல்லாத பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு அனுமதித்தாலும் ஏற்கனவே தரிசன டோக்கன் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் சுவாமி தரிசனத்திற்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் திருமலையில் மற்ற இடங்களை பார்வையிடலாம்.

அதேபோல் 3 நாட்களுக்கு, திருப்பதிக்கு வரும் பல்வேறு மார்க்கங்களில் டோக்கன் உள்ள பக்தர்களை மட்டும் அனுமதிக்க போலீசாரும் ஏற்பாடுகளை செய்துள்ளனர். எனவே, 1ம்தேதி வரை டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 2ம்தேதி முதல் 8ம் தேதி வரை டோக்கன் எதுவுமின்றி நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க திருமலையில் கூடுதலாக 2 ஆயிரம் போலீசார், திருப்பதியில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,Vaikunta Ekadashi ,of ,Kali Yuga ,
× RELATED ஒன்றிய அரசைக் கண்டித்து ஜன.12ம் தேதி...