×

பயணிகளை ஈர்க்க கூடுதல் சலுகைகளை வழங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

டெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது பயணிகளுக்குப் புத்தாண்டுப் பரிசாகக் குறைந்த விலையில் விமானப் பயணத்தை வழங்குகிறது. இந்தச் சலுகையின் கீழ் உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.1,950 முதலும், சர்வதேசப் பயணங்கள் ரூ.5,590 முதலும் தொடங்குகின்றன. குறிப்பாக, அதிக உடமைகள் இன்றிப் பயணிப்பவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘லைட் ஃபேர்’ (Lite Fare) திட்டத்தில், உள்நாட்டுப் பயணத்திற்கு ரூ.1,850 மற்றும் சர்வதேசப் பயணத்திற்கு ரூ.5,355 என மிகக் குறைந்த ஆரம்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புத் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வரும் ஜனவரி 1, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவின் மூலம் உள்நாட்டுப் பயணங்களை ஜனவரி 12, 2026 முதல் அக்டோபர் 10, 2026 வரையிலும், சர்வதேசப் பயணங்களை ஜனவரி 12, 2026 முதல் அக்டோபர் 31, 2026 வரையிலும் மேற்கொள்ள முடியும். பயணிகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் ஆப் அல்லது பிற முன்னணி தளங்கள் வாயிலாகத் தங்களது இடங்களை உறுதி செய்து கொள்ளலாம்.

பயணிகளுக்கு மேலும் பயனளிக்கும் வகையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்குக் கன்வீனியன்ஸ் கட்டணம் (Convenience Fee) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், இணையதளத்தில் நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கும் கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்குச் செலவைக் குறைக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

Tags : Air India Express ,Delhi ,New Year ,
× RELATED எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான்...