சூலூர் : சூலூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த திடீர் கனமழை காரணமாக சுமார் 1 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது.
இதனால் ஜல்லிப்பட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், தாளக்கரை, கரையாம்பாளையம், செஞ்சேரி, கள்ளப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் தோட்டங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘சுல்தான்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான விவசாயிகள் வாழை சாகுபடி பிரதான தொழிலாக கொண்டுள்ளோம். தற்போது சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் வேரோடு சரிந்துவிட்டன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு இன்னும் 7 மாதங்கள் இருந்த நிலையில் சாய்ந்த வாழை மரங்களை எதுவும் செய்ய முடியாது. சரிந்த வாழை மரங்களை அப்புறப்படுத்த ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.
எனவே அரசு இதனை பரிசீலித்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.
The post சூலூர் அருகே சூறாவளி காற்றுடன் கனமழை 100 ஏக்கரில் 1 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் appeared first on Dinakaran.