தமிழுக்கு மகுடம்

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 28 ஆயிரத்து 886 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் இரண்டரை கோடி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளிகளில் இதுநாள் வரை ஆங்கிலம், இந்தி ஆகியவை மட்டுமே பயிற்று மொழியாக இருந்து வந்தது. பிராந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் இதுநாள் வரை இல்லாமல் இருந்து வந்தது. உலகின் பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றான செம்மொழி தமிழுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும், சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் புதிய தேசிய கல்வி கொள்கையிலும் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும், மாணவர்களிடையே பன்மொழி திறனை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தற்போது தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளில் பாடம் கற்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் மழலையர் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பாடம் எடுக்கப்பட வாய்ப்புகள் கிட்டியுள்ளது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ்மொழியில் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும்.

பயிற்றுமொழி பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தொடர்ச்சியாக இருக்க ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய அணுகுமுறை மூலம் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு உயர்வு கிட்டும். இதற்காக பிராந்திய மொழிகளில் புதிய பாடநூல்களைத் தயாரிக்க தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துக்கு (என்சிஇஆர்டி), ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியது. அதற்கான பணியில் என்சிஇஆர்டி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் இருந்து 22 இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும். தொழிற்கல்வி, சட்டம், மருத்துவம், திறன் மேம்பாடு உள்ளிட்டவைகளுக்கும் ஏற்கனவே பிராந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் தயாராகி வருகின்றன.

இம்மொழிகளில் பாடம் எடுப்பதற்கு தேவையான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் இனி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி இடம் பெறும் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்கிற ஒன்றிய அரசின் உத்தரவுக்கு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் தமிழுக்கு மகுடம் சூட்டும் வகையில், இப்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் வழியில் பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செம்மொழி தமிழுக்கு உரிய அங்கீகாரம் காலம் கடந்தாவது வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் மீடியம் என்ற போக்கு நாடு முழுவதும் பரவியிருக்கும் தமிழ் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

The post தமிழுக்கு மகுடம் appeared first on Dinakaran.

Related Stories: