8.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7,081 கோடி பயிர்க்கடன்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு நிதியாண்டில் 8.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7,081 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் கோபால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாய பணிகளுக்கு மட்டுமன்றி, கடந்த 2022-23ம் ஆண்டு முதல் கால்நடை பராமரிப்பு மற்றும் அவை சார்ந்த இதர பணிகளுக்கும் உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதன கடன் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் (2023-24) 31.10.2023 வரை 2.02 லட்சம் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.1,085 கோடி அளவிற்கு கேசிசி திட்டத்தின்கீழ் கடனும், நடப்பு நிதி ஆண்டில் (2023-24), 30.9.2023 வரை 37,461 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,334 கோடி கடனும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 30.9.2023 வரை 3,678 கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.14 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் அவர்கள் வாழ்க்கையை மேற்கொள்ளவும், பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் வகையிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் 30.9.2023 வரை 6,052 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29 கோடி அளவிற்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

அறுவடை காலங்களில் விளைபொருட்களின் விலை குறைவாக உள்ளபோது விவசாயிகள் தானியங்களை இருப்பு வைத்து லாபகரமான விலை கிடைக்கும் போது அவற்றை விற்றுப் பயனடையும் வகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 30.9.2023 வரை ரூ.128 கோடி மதிப்பிற்கு தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அவசர தேவைகளுக்காக கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 30.9.2023 வரை 29.55 லட்சம் பேருக்கு ரூ.20,953 கோடி அளவிற்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 31.10.2023 வரை 8.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7,081 கோடி அளவிற்கு உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

The post 8.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7,081 கோடி பயிர்க்கடன்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: