கோபமாக நடந்து கொண்டதற்காக சக நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார் ஐகோர்ட் நீதிபதி

புதுடெல்லி: குஜராத் உயர்நீதிமன்றத்தில் சக நீதிபதியிடம் கோபமாக நடந்து கொண்ட மூத்த நீதிபதி தனது செயலுக்காக விசாரணை அறையில் அனைவரின் முன்னிலையில் மன்னிப்பு கோரினார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக குஜராத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி பிரின் வைஷ்ணவ் மற்றும் மவுனா.எம்.பட் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு முக்கிய வழக்கை விசாரித்தது. அப்போது விசாரணையின் முடிவில் மூத்த நீதிபதி பிரேன் வைஷ்ணவ் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தபோதே, அந்த உத்தரவில் தனக்கு உடன்பாடு இல்லை என மற்றொரு நீதிபதியான மவுனா.எம்.பட் வெளிப்படையாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மூத்த நீதிபதி பிரேன் வைஷ்ணவ் எனது உத்தரவில் வேறுபட்ட கருத்து இருக்கிறது என்றால், நீங்கள் தாராளமாக ஒரு தனிப்பட்ட உத்தரவை பிறப்பிக்கலாம்.

அதை விடுத்து எனது அருகில் அமர்ந்து கொண்டு தொந்தரவு செய்யும் நோக்கத்தில் ஈடுபடக் கூடாது என கோபமாக தெரிவித்து விட்டு, இனிமேல் தற்போது வேறு எந்த வழக்கையும் விசாரிக்க போவதில்லை என தெரிவித்து விசாரணை அறையை விட்டு அதிரடியாக வெளியேறினார். இந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரணை அறைக்கு வந்த நீதிபதி பிரேன் வைஷ்ணவ்” கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்வு என்பது மிகவும் துரதிஷ்டமானது. அது நடந்திருக்க கூடாது. தவறு என்னுடையது தான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்காது என அனைத்து வழக்கறிஞர்கள் முன்னிலையில் சக நீதிபதியான மவுனா.எம்.பட்டிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கமான முறையில் நீதிபதிகள் விசாரணையை தொடங்கினர்.

The post கோபமாக நடந்து கொண்டதற்காக சக நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார் ஐகோர்ட் நீதிபதி appeared first on Dinakaran.

Related Stories: