×

அதிகரித்து வரும் தொற்று: கொரோனா வழிகாட்டு நெறிமுறை டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டது


புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது வரை இந்த வைரசால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 70 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை தந்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. தற்போது மீண்டும் பரவல் தீவிரமடைந்துள்ளது. ஒமிக்ரான் பிஏ.2.86 வைரஸில் இருந்து திரிபு ஏற்பட்டு ‘ஜேஎன் 1’ எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தளவில் கேரளாவில் ஒரு முதியவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது. அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்தான். இதில் உயிரிழப்பு 8 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா என உலகின் 70-75 சதவீத மக்கள் தொகையை கொண்டிருக்கும் வட அரைகோள பகுதியில் இது குளிர் காலம் என்பதால் தொற்று பாதிப்பு சுவாச கோளாறை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

இதிலிருந்து தப்பிக்க, முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், அதிகளவில் கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளுதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்து இருக்கிறது. இந்தியாவை பொறுத்தளவில், நேற்று மட்டும் 529 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த பாதிப்பு 4,50,10,189ஆக உயர்ந்துள்ளது. இதில் 98.81 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேஎன் 1 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் குறித்து வழிகாட்டுதல்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கியது. அதன்படி சுவாச தொற்று, தொடர் இருமல், தொடர் காய்ச்சல் இருப்போருக்கு கோவிட் பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ளப்படும்.

The post அதிகரித்து வரும் தொற்று: கொரோனா வழிகாட்டு நெறிமுறை டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டது appeared first on Dinakaran.

Tags : Delhi AIIMS ,New Delhi ,Delhi AIIMS Hospital ,China ,
× RELATED டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு...