குன்னூர் பழவியல் பண்ணைக்கு ஜாம் தயாரிக்க ஒன்றரை டன் பேரிக்காய்கள் வழங்க முடிவு

ஊட்டி : ஊட்டியில் உள்ள தேயிலை பூங்காவில் இருந்து ஜாம் தயாரிக்க பழவியல் பண்ணைக்கு ஒன்றரை டன் பேரிக்காய்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அருகேயுள்ள தொட்பெட்டா பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான ேதயிலை பூங்கா உள்ளது. இந்த பூங்கா கடந்த சில ஆண்டுகள் முன் வரை தேயிலை தோட்டம் மற்றும் பேரிக்காய் தோட்டமாக இருந்தது. அதனை தற்போது பூங்காவாக மாற்றி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வந்துச் செல்ல ஏற்றவாறு புல் மைதானங்கள், விளையாட்டு சாதனங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒரு பகுதி தேயிலை தோட்டமாக உள்ளது. இதில், ஏராளமான பேரிக்காய் மரங்கள் உள்ளன. இதிலிருந்து ஆண்டுதோறும் பேரிக்காய்கள் பறிக்கப்பட்டு, ஜாம் தயாரிப்பதற்காக குன்னூர் பழவியல் பண்ணைக்கு வழங்கப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கும் குறைந்த விலையில், பேரிக்காய் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு ஒன்றரை டன் பேரிக்காய்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது 500 கிலோ பேரிக்காய்கள் பழவியல் பண்ணைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு டன் பேரிக்காய்கள் விரைவில் பறித்து பழவியல் பண்ணைக்கு வழங்கப்படவுள்ளது. இது தவிர நாள்தோறும் பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த விலையில், இந்த பேரிக்காய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கரடி மற்றும் குரங்குளின் தொல்லையால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேரிக்காய் மரங்கள் அகற்றப்பட்டபோதிலும், தேயிலை பூங்காவில் ஆண்டுதோறும் பல்வேறு வகையான பேரிக்காய்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஜாம் தயாரிப்பதற்காக பழப்பண்ணைக்கு வழங்கி வருகிறது.

The post குன்னூர் பழவியல் பண்ணைக்கு ஜாம் தயாரிக்க ஒன்றரை டன் பேரிக்காய்கள் வழங்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: