இந்த ரயிலை கவிழ்க்கும் சதி தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் சவ்ரவ்குமார், சேலம் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி (பொ) பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஈரோடு ரயில்வே போலீசில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தண்டவாளத்தில் 10 அடி நீள தண்டவாள துண்டை தூக்கி வைத்தது யார் என்பதை கண்டறிந்து, கைது செய்ய டிஎஸ்பி பாபு, இன்ஸ்பெக்டர்கள் சிவசெந்தில்குமார், பிரியாசாய் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இத்தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள அ.தாழையூர், காளிக்கவுண்டன்பாளையம் கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைக்கப்பட்ட இடத்தின் வழியே இரவு 8.30 மணிக்கு சரக்கு ரயில் சென்றுள்ளது. அதனால், அதன்பிறகே தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் யார்? என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தின் அருகில் 2 வீடுகள் உள்ளன. அந்த வீட்டில் வசிப்போரிடம் போலீசார் விசாரித்ததில், இரவில் குறிப்பிட்ட நேரத்தில் அவ்வழியே யாரும் வரவில்லை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அதேவேளையில் தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைக்கப்பட்ட அந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஈரோடு-சேலம் பைபாஸ் சாலை இருக்கிறது. அதனால், தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்த மர்மநபர்கள், சாலை மார்க்கமாக தப்பிச் சென்றிருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். அதனடிப்படையில் மெயின்ரோட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் இதர தகவல்தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மர்மநபர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இன்னும் ஓரிருநாளில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சேலம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி; தண்டவாளத்தில் இரும்பை வைத்து விட்டு சாலை மார்க்கத்தில் தப்பிய மர்ம நபர்கள்: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.
