இருவருக்கும் சம்மதம் இருக்கும் பட்சத்தில் 17 வயது சிறுமியுடனான உடலுறவு பலாத்காரம் ஆகாது: ஒடிசா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புவனேஸ்வர்: பாலியல் செயலில் ஈடுபடும் இருவருக்கும் சம்மதம் இருக்கும் பட்சத்தில், சிறுமியுடனான உடலுறவு பலாத்காரம் ஆகாது என ஒடிசா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாந்தனு கவுரி (45) என்பவர், கடந்த 2013ம் ஆண்டு அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை தினமும் வனப்பகுதிக்கு அழைத்து செல்வார். திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தந்தையான அவர், வனப்பகுதிக்குள் சிறுமியை அழைத்து செல்லும் போதெல்லாம் அவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். தான் கர்ப்பமான விசயம் கூட தெரியாத அந்த சிறுமி, சில மாதங்களுக்கு பின்னரே தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சாந்தனு கவுரியை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்றம், சாந்தனு கவுரியை குற்றவாளி என தீர்ப்பளித்து சிறை தண்டனை விதித்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஒடிசா உயர் நீதிமன்றத்தில் சாந்தனு கவுரி மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.சாஹூ அளித்த தீர்ப்பில், ‘குற்றம் சாட்டப்பட்டவருடன் பாதிக்கப்பட்ட சிறுமி தினமும் காட்டுக்குள் உடலுறவு கொண்டுள்ளார். சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 17 ஆக இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருப்பது என்பது பாதிக்கப்பட்டவருக்குத் தெரியும். இருந்தும் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தான் கர்ப்பமாக இருந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தும், அவரது பாலியல் பலாத்கார செயலை எதிர்க்கவில்லை.  மேலும் அதனை யாரிடமும் கூறவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட நபர் திருமணமானவர் மற்றும் 4 குழந்தைகளுக்கு தந்தை என்பதால், தன்னை திருமணம் செய்து ெகாள்வதற்கான சாத்தியமில்லை என்பதும் அவருக்குத் தெரியும். எனது பார்வையில், அந்தப் சிறுமியின் சம்மதத்தின் பேரில் எல்லாம் நடந்துள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிப்பதற்கான போதுமான காரணங்கள் இல்லை. பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமானது, பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களுடன் ஒத்துப்போகவில்லை. இருவருக்கும் இடையிலான பாலியல் செயலை கற்பழிப்பு என்று கூற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெற வேண்டிய அவசியமும் இல்லை. எனவே பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தனு கவுரி விடுதலை செய்யப்படுகிறார்’ என்று கூறியுள்ளார்.

The post இருவருக்கும் சம்மதம் இருக்கும் பட்சத்தில் 17 வயது சிறுமியுடனான உடலுறவு பலாத்காரம் ஆகாது: ஒடிசா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: