தொடர்ந்து 3வது முறையாக வெற்றி இது ஒரு வரலாற்று சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லியில் உள்ள பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வாணவேடிக்கை முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வெற்றி பற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறுகையில்,“ தொடர்ந்து 3வது முறையாக பெற்ற வெற்றி இந்திய வரலாற்றில் வரலாற்றுச் சாதனை. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளும் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த பாசத்திற்கு நான் தலைவணங்குகிறேன்,

மேலும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற கடந்த 10 ஆண்டுகளில் செய்த நல்ல பணிகளை நாங்கள் தொடருவோம் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். ஒடிசாவில் பாஜ முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இது நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மேலும் ஒடிசாவின் தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டாடுகிறது. மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு பா.ஜ நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

* ‘ஜெய் ஜெகநாத்’ மோடி புது கோஷம்
டெல்லி கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,’ ஜெய் ஜெகநாத். 1962க்குப் பிறகு, இப்போதுதான் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜ மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முடிவுகள் மக்களின் வெற்றி, ஜனநாயகம் மற்றும் நாட்டின் அரசியல் சாசனத்தின் மீதான நம்பிக்கை. ஒடிசாவில் முதல் முறையாக பா.ஜ ஆட்சி அமைக்க மக்கள் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

கேரளாவில் முதல்முறையாக பா.ஜ வெற்றி பெற்றுள்ளது. அங்கு பா.ஜ வெற்றிக்காக பல தொண்டர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலும், பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. உலகின் மிகப்பெரிய தேர்தலை மிகவும் திறமையாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி’ என்று மோடி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் இருந்தனர். பின்னணியில் உருது உட்பட பல மொழிகளில் ‘நன்றி இந்தியா’ என்று எழுதப்பட்டிருந்தது.

The post தொடர்ந்து 3வது முறையாக வெற்றி இது ஒரு வரலாற்று சாதனை: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: