எந்த வித சட்ட அனுமதியும் இன்றி அரசு மிகப்பெரிய அளவில் நிதி திரட்ட முடியுமா?.. பிஎம் கேர்ஸ் குறித்து காங்கிரஸ் கேள்வி..!

டெல்லி: பிஎம் கேர்ஸ் என்னும் பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா நிவாரண பணிகளுக்காக கடந்தாண்டு பிஎம் கேர்ஸ் நிதி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பணபலம் படைத்த பல முன்னணி தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், வெளிநாட்டினர் நிதியளித்தனர். அதேபோல சாமானிய மக்களும் தங்களால் இயன்ற தொகையை அனுப்பிவைத்தனர். ஆனால் அந்த நிதி எந்த வகையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பாக எழுப்பப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் பதில் அளிக்கப்படவில்லை.

அந்த நிதியத்தை யார் நிர்வகிக்கிறார்கள், எவ்வளவு பணம் செலவாகியிருக்கிறது போன்ற எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனிடையே தற்போது பி.எம்.கேர்ஸ் நிதியில் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2,900 கோடி நன்கொடையாக வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது மேலும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; பிரதமர் மோடியின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு யார் பணம் தருகிறார்கள் என்பது மர்மமாக உள்ளது. நிதி பங்களிப்பில் 60% பொதுத்துறை நிறுவனங்கள் தந்துள்ளன. எந்த வித சட்ட அனுமதியும் இன்றி அரசு மிகப்பெரிய அளவில் நிதி திரட்ட முடியுமா?,

சட்ட அனுமதியின்றி பெறப்படும் நிதிக்கு பொறுப்பு, கண்காணிப்பு எங்கே? இந்த நிதிக்கு யார் பணம் தருகிறார்கள் என்பது ஏன் கூறப்படுவதில்லை? யாருக்கு பணம் தரப்படுகிறது என்பதுவும் சொல்லப்படுவதில்லை. இந்த நிதி தானாகவே முன்வந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். இது தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பின் கீழும் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மீது தலைமை கணக்கு தணிக்கையர் ஆய்வு நடைபெற வேண்டும். நிதி வசூல் அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு முரணானது என்பதை நிரூபிப்பேன் இவ்வாறு கூறினார்.

The post எந்த வித சட்ட அனுமதியும் இன்றி அரசு மிகப்பெரிய அளவில் நிதி திரட்ட முடியுமா?.. பிஎம் கேர்ஸ் குறித்து காங்கிரஸ் கேள்வி..! appeared first on Dinakaran.

Related Stories: