அனைத்து தரப்பினர் முன்வைக்கும் கருத்துகளின்படி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்: குழு தலைவர் ப.சிதம்பரம் தகவல்

சென்னை: அனைத்து தரப்பினர் முன்வைக்கும் கருத்துகள் அடிப்படையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் ப.சிதம்பரம் கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்கள் கருத்துகேட்பு கூட்டம் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ்.இளங்கோவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, துணை தலைவர் கோபண்ணா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள், கல்வியாளர்கள், விவசாய சங்கள், கரும்பு உற்பத்தியாளர்கள், மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

கருத்துகேட்பு நிகழ்ச்சியில், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத் தலைவர் வெங்கடாச்சலம், தென்னிந்திய திருச்சபை பேராயர் தேவசகாயம், பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவர் ரகுநாதன், எஸ்.ஆர்.இ.எஸ். பொதுச் செயலாளர் சூர்யபிரகாசம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். சிலர் கருத்துகள் மற்றும் தங்கள் கோரிக்கைகளை எழுத்துப் பூர்வமாகவும் கொடுத்தனர்.

பின்னர் ப.சிதம்பரம் பேசுகையில், ‘நீங்கள் சொன்ன கருத்துகளை எல்லாம் வைத்து எந்த அளவுக்கு தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடியுமோ அதை தயாரிப்போம். இங்கு தேர்தல் அறிக்கைக்காக பேசிய அனைத்து கருத்துகளையும் அவரவர் சார்ந்த துறைகளில் 100 இடங்களில் பேசினால் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கும்’ என்றார்.

பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அசாம் மாநில முதல்வர் கூறியிருக்கிறார். தேர்தல் முடிந்ததும், அசாம் முதல்வர் தான் கைது செய்யப்படுவார். இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டணியில் இருந்தாலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோன்று ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் இந்த அறிவிப்பால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை. முதலில் கூட்டணியில் அவர்கள் இல்லை. பிறகு அவர்கள் கூட்டணிக்கு வந்தார்கள். இப்போது இப்படி அறிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும். திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைத்து தரப்பினர் முன்வைக்கும் கருத்துகளின்படி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்: குழு தலைவர் ப.சிதம்பரம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: