கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: வணிகவரித்துறையில் 2024-2025ம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல், மே, ஜூன்) கடந்த நிதியாண்டைவிட ரூ.3727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி வணிகவரித்துறை நுண்ணறிவுப்பிரிவின் கூடுதல் ஆணையர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் ரூ.1040 கோடி போலி உள்ளீட்டு வரியினை கண்டுபிடித்து போலியான பில் வழங்கிய 316 பதிவுச்சான்றுகள் ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணித்திறனாய்வு கூட்டத்தில் வழங்கப்படும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள் தங்கள் கீழுள்ள துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநில வரி அலுவலர்களிடம் கலந்தாலோசித்து வரி வருவாய் அதிகப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தங்கள் கோட்டத்திற்கு தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் வசதிகளை அரசுக்கு தெரியப்படுத்தலாம். மேலும், தரவுகளின் உண்மை தன்மையை கண்டறிய அதிநவீன மென்பொருள்கள் விரைவில் துறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) பொ.ரத்தினசாமி, வணிக வரித்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post வணிகவரித் துறையில் கடந்த 3 மாதங்களில் கடந்த நிதியாண்டை விட ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.