×

குடிமைப்பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம்: யுபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் பேட்டி

சென்னை: யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது ஆதார் அவசியம் என்ற நடைமுறையை கொண்டு வர இருப்பதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கம் அரசினர் புதிய விருந்தினர் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவர் அஜய்குமார் தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் அரியானா, ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அசாம், பீகார், இமாசல பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 12 மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தின் முதல் நாளான நேற்று அரசுத்துறை பணியாளர்களை தேர்வு செய்யும் செயல் முறைகளில், நேர்மையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது, தேர்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, தேர்வுத் தொடர்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்ற முக்கிய அம்சங்கள்பற்றி விவாதிக்கப்பட்டது.

முன்னதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அஜய்குமார் அளித்த பேட்டி: நாடு முழுவதும் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் நடைபெறும் தேர்வுகளும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இத்தகைய தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறோம். வரும் காலத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் போது, ஆதார் அவசியம் என்ற நடைமுறையை கொண்டு வர உள்ளோம். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிலைக்குழு கூட்டத்தில், அரசுப் பணிக்கான தேர்வுகளில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்த பல்வேறு விவாதங்கள் மேற்கொள்ளபட உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர் அளித்த பேட்டி:இந்த கூட்டத்தில் தேர்வுகள் நடத்தும் முறைகள், அதில் உள்ள சிரமங்கள், மேம்படுத்தும் முறை, வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு நடத்தும் முறை உள்ளிட பலவிதமான பிரச்னைகள் குறித்து விவாதிப்போம். மேலும், தேர்வுகளில் ஓஎம்ஆர் சீட்டை மேம்படுத்துவது, ஓஎம்ஆர் சீட்டில் உள்ள சிரமங்களை நீக்கி, பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பது, விடைத் தாள்களை திருத்துவது குறித்தும் பல்வேறு திட்டங்களையும் உருவாக்கியுள்ளோம். தொடர்ந்து, தமிழக மாணவர்கள், வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் போது உள்ள சிரமங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம். இவ்வாறு கூறினர்.

The post குடிமைப்பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம்: யுபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,UPSC ,Ajay Kumar ,Chennai ,Union Public Service Commission ,State Public Service Commission ,Chennai Chepauk Govt… ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...