கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாட்டம்; அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி(அதிமுக பொது செயலாளர்): நாம் மற்றவரிடம் எதை எதிர்ப்பார்க்கிறோமோ அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும் என்ற யேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும்.

கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ் தலைவர்): மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

ராமதாஸ்(பாமக நிறுவனர்): உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும். உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் உறுதி ஏற்போம்.

வைகோ(மதிமுக பொதுசெயலாளர்): உயர்ந்த லட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக் கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளை மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் ஈழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): இயேசு கிறிஸ்து பிறந்த இந்நந்நாளில் அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெறுகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும், எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.

திருமாவளவன்(விசிக தலைவர்): இயேசு பெருமானின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது. உயர்வு – தாழ்வு என்னும் பாகுபாட்டுக்கு எதிரானது. சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகோதரத்துவத்தால் இணைக்கக்கூடியது. சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

அன்புமணி(பாமக தலைவர்): இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதி ஏற்போம்.

டிடிவி தினகரன்(அமமுக பொதுசெயலாளர்): இயேசுபிரான் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

பிரசிடெண்ட் அபூபக்கர்(இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்):
வெள்ளம் பாதித்த அனைத்து பகுதிகளில் உள்ள மக்களும் மீண்டு வந்து மறு வாழ்க்கையை தொடங்குவதற்கான ஆசியை எல்லாம் வல்ல இறைவன் இந்த கிறிஸ்துமஸ் நாள்முதல் கொடுக்கட்டும். சாதி, மதம், இனங்களைக் கடந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு அனைத்து கிறிஸ்தவ நண்பர்களுக்கும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

மேலும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், புதிய நீதிக்கட்சி நிறுனவர் தலைவர் ஏ.சி.சண்முகம், எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.ஹென்றி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை கண்ணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி. தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாட்டம்; அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: