நாகர்கோவில்: கிறிஸ்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்ட பாஜ ஆதரவாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கியப்பிரிவு மாநில தலைவரும், பாஜ ஆதரவாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் சமீபத்தில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் வெளிநாட்டு மத கலாசாரத்தின் உண்மை நிலை இதுதான் என்று ஒரு கிறிஸ்தவ மத போதகர் பெண்ணுடன் ஆடுவது போன்ற ஒரு வீடியோவை எடிட்டிங் செய்து பின்னணியில் தமிழ் இசையுடன் பதிவிட்டு இருந்தார். இந்த அவதூறு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால், கனல் கண்ணனை கைது செய்யக்கோரி குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து, நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் ஆஜரானார். அவருடன் வழக்கறிஞர்களும் குமரி மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள், வி.எச்.பி. நிர்வாகிகளும் வந்தனர். காலை 10 மணி முதல் கனல் கண்ணனிடம் விசாரணை நடந்தது. மதியம் 2.30 மணியளவில் விசாரணை முடிந்து விட்டதா? நான் செல்லலாமா? என கனல் கண்ணன் கேட்டார்.
அப்போது அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் நிலையம் முன் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அப்போது கனல் கண்ணன், எனக்கு உடல் நிலை சரியில்லை. நான் உணவருந்த வேண்டும் என கூறி விட்டு வெளியே வந்தார். எஸ்.பி. அலுவலக வாசலில் நின்று அவர் நிருபர்களிடம், ‘நான் சட்டப்படி பதில் அளித்துள்ளேன். எந்த மதத்தையும் இழிவு செய்யவில்லை’ என்று பேட்டி அளித்தார். அப்போது அங்கு வந்த ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன், ‘உங்களிடம் விசாரணை முடியவில்லை. நீங்கள் வெளியே செல்லக்கூடாது. எனவே காவல் நிலையத்துக்கு வாருங்கள்.
விசாரணை முடிந்து எழுத்து பூர்வமான பதிலை அளித்து விட்டு செல்லுங்கள்’ என்றார். இதனால் கனல் கண்ணனுக்கு ஆதரவாக இந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதில் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கனல் கண்ணன், மீண்டும் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்குள் சென்றார். பாஜ நிர்வாகிகளும் அங்கு வந்தனர். மாலை 5 மணி வரை கனல் கண்ணனிடம் விசாரணை நடந்தது. அதன்பின் சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணனை கைது செய்தனர்.
* மதக்கலவரத்தை தூண்டும் பேச்சு இந்து திராவிட மக்கள் கட்சி பிரமுகர் கைது
இந்து திராவிட மக்கள் கட்சியின் தலைவர் ரமேஷ்பாபு. இவர், கடந்த 3ம் தேதி நாகூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது குறித்து நாகூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் சென்னை குரோம்பேட்டை சென்ட்ரல் பேங்க் காலனி வீட்டில் இருந்த ரமேஷ்பாபுவை கைது செய்தனர். பின்னர் அவர் நாகூர் அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார்.
The post கிறிஸ்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ பாஜ ஆதரவாளர் கனல் கண்ணன் கைது: போலீசுடன் இந்து முன்னணியினர் வாக்குவாதம் ; தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.