×

வைப்பூர் ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுநீரால் மாசடைந்து வரும் சித்தேரி

ஸ்ரீபெரும்புதூர்: வைப்பூர் ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுநீரால் மாசடைந்து வரும் சித்தேரியை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சித்தேரி உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, அப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், வைப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் ஆயில் மற்றும் ரசாயனம் கலந்த கழிவுநீர், நீர்வரத்து கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இவை ஏரி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு சென்று ஏரிநீரை மாசுபடுத்தி வருவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும் ரசாயனம் கலந்த கழிவுநீரால் ஏரியில் உள்ள செடிகள் கருகிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் ஏரிநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மாசடைந்த நீரை கால்நடைகள் பருகும்போது பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் நிலத்தடிநீரும் பாதிப்படையும் சூழல் உருவாகும் என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஏரியில்விடும் தனியார் தொழிற்சாலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வைப்பூர் ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுநீரால் மாசடைந்து வரும் சித்தேரி appeared first on Dinakaran.

Tags : Chitteri ,Vaipur Uradchi ,Chiteri ,Viapur ,Kunrathur Union ,Public Works Department ,Vaipur Uratchi ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...