நெசவுத்தொழிலுக்கு அடிப்படையான சாயத்தொழில் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு உதவவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், 150க்கும் மேற்பட்ட சிறு சாயப்பட்டறைகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. இங்குள்ள விசைத்தறிகள் எடைக்கு போடப்பட்டு வருகிறது. பட்டுக்கு பெயர் பெற்ற இளம்பிள்ளை நெசவை கைவிட்டு விட்டு, சூரத்தில் இருந்து செயற்கை பட்டை வாங்கி விற்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
சாயக்கழிவுகளால் காவிரி நீர் பாதிக்கப்பட்டு கிட்னி பாதிப்பு, தோல் நோய், புற்றுநோய் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. தொழிலும் பாதிக்காமல், பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் கேடு இல்லாமல் பாதுகாக்க சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர கோரிக்கை விடுத்தோம். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிலத்தையும் வாங்கி ஒப்படைத்தோம். கடந்த 10 ஆண்டுகளாகவே, இந்த திட்டத்துக்கான பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் எந்த பணிகளும் நடக்கவில்லை. தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் (அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி), கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகுதான், சுத்திகரிப்பு நிலையத்துக்கான கோப்புகள் தமிழக அரசின் ஒப்புதல் பெற்று டெல்லிக்கு நகர்ந்துள்ளது. மாநில அரசின் மீதுள்ள காழ்ப்புணர்வினால் இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிதியை, ஒன்றிய அரசு ஒதுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. சாயத்தொழில் மீதான நெருக்கடியால் ஜவுளித்தொழிலில் பின்னடைவை சந்தித்து வருகிறோம். பருத்தி ஏற்றுமதியால் நாம், சீனாவில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் (அம்பானிக்கு சொந்தமானது) இறக்குமதி செய்யும் பாலியஸ்டர் பஞ்சு வாங்கி நெசவு செய்ய வேண்டியுள்ளது. தொழில் மீதான நெருக்கடியால், கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை தாங்காமல் 200க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும், 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஜவுளித் தொழிலாளர் வாழ்க்கையில் வசந்தம் வீச, ஜவுளித் தொழில் மறுமலர்ச்சியடைய, சாய சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஒன்றிய அரசு அனுமதியும், அதற்கான நிதியும் வழங்க வேண்டும். பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேளாண்மை கொள்கையை ஏற்படுத்த வேண்டும். பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுத்து துணியாக ஏற்றுமதி செய்ய ஊக்கப்படுத்த வேண்டுமென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றும் வேட்பாளர்களின் உண்மைத்தன்மை அறிந்து, அவருக்கே ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் வாக்களிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்என்சி.,க்கு ஆதரவாக பஞ்சு விலை உயர்வு: துணைபோகும் ஒன்றிய அரசு
சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் சங்க தலைவர் ராசி.சரவணன் கூறியதாவது: பஞ்சு விலையை பொறுத்தமட்டில் அவ்வப்போது கேண்டி விலை ₹300 முதல் ₹500 வரை தான் உயரும். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் பஞ்சு ஒரு கேண்டி (356 கிலோ) ₹54 ஆயிரத்திற்கு விற்றது. 2022ம் ஆண்டு மே மாதத்தில் பஞ்சு விளைச்சல் சரிவாலும், பதுக்கல் காரணமாகவும் ஒரு கேண்டி ₹1.16 லட்சமாக அதிகரித்தது. பஞ்சு வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாக இருந்தது. பஞ்சு விலையை கட்டுப்படுத்தக்கோரி நூல் வியாபாரிகள், ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் மில் உரிமையாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் பல்வேறு கட்டங்களில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் பிறகு வட மாநிலங்களில் ஓரளவுக்கு பஞ்சு விளைச்சல் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் பலனாக 2022 நவம்பரில் ஒரு கேண்டி பஞ்சு படிப்படியாக ₹85 ஆயிரம் வரை சரிந்தது. இதன் பின்னர் ஓரளவுக்கு ஜவுளி உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 2023 பிப்ரவரியில் ஒரு கேண்டி பஞ்சு ₹70 ஆயிரத்திற்கு விற்றது. இவை படிப்படியாக மே மாதத்தில் ₹ ₹62 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. பஞ்சை பொறுத்தமட்டில் வட மாநிலங்களில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனிகள் (எம்என்சி) தான் அதிகளவில் இருப்பு வைக்கிறது. இவர்கள்தான் பஞ்சு விலையை நிர்ணயம் செய்கின்றனர். இவர்களால் தான் பஞ்சு விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஒரு கேண்டி பஞ்சு ₹60 ஆயிரத்திற்கு விற்றது. தற்போது ₹63 ஆயிரத்து 500க்கு விற்கிறது. இவர்கள் வெளிநாடுகளுக்கு மட்டும்தான் பஞ்சை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் பஞ்சை இருப்பு வைத்து உள்நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றனர். இவர்களை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தாமல் விலை உயர்வுக்கு துணை போவது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினர்.
The post சீனாவுக்கு பருத்தி ஏற்றுமதியால் கடன் சுமை; கடந்த 3 ஆண்டு மோடி ஆட்சியில் 200 ஜவுளி உற்பத்தியாளர்கள் தற்கொலை appeared first on Dinakaran.