முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு, கோத்ரேஜ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (10.8.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 515 கோடி ரூபாய் முதலீட்டில் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் கோத்ரேஜ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாடு, தானியங்கி வாகனங்கள், ஜவுளி, காலணி மற்றும் தோல்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு என பல்வேறு வகையான தொழில்களை நிறுவிட ஊக்கமளிப்பதன் மூலம், முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது.

2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கினை விரைவில் அடைவதற்காக, அதிக முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அம்முயற்சிகளுக்கு மகுடம் சூட்டும் வகையில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்திட உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

கோத்ரேஜ் குழுமம்

கோத்ரேஜ் குழுமம் 125 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு பெருங்குழுமம் ஆகும். உலகளவில் பல்வேறு வணிகங்களை மேற்கொண்டுவரும் இக்குழுமம், சுமார் 120 கோடி நுகர்வோரின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் நிகர வருமானம், ரூ.7667 கோடி ஆகும். இந்நிகர வருமானம் சுமார் 85 நாடுகளிலிருந்து ஈட்டப்பட்டுள்ளது.

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம்

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், கோத்ரேஜ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். நுகர்வோர் தயாரிப்புகளில் இது ஒரு வளர்ந்து வரும் சந்தை நிறுவனமாவும் திகழ்கிறது. இந்நிறுவனம், இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி அலகுகளை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் ஒரு உற்பத்தி மையத்தினை நிறுவியுள்ள இந்நிறுவனம், மேம்பட்ட உற்பத்தி மையத்தின் ஒரு சிறப்புமிக்க நிறுவனம் என்பதை இலக்காகக்கொண்டு ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முகஅழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றிற்கு ஒரு உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது. இந்த திட்டத்தில், 50 சதவிகிதம் அளவிற்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும். மேலும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது புத்தாக்கம் மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் நிறுவப்படவுள்ளதாக கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசிற்கும் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

 

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு, கோத்ரேஜ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: