சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் ஏறி வழிபட தீட்சிதர்கள் தடை: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சிதம்பரம் : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் இன்று தேரோட்டமும் நாளை ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை நுழைவுவாயில் அருகே நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி கிடையாது என்று பதாகை வைத்துள்ளனர். இது குறித்து இந்து அறநிலைத்துறைக்கு புகார் சென்றது. அதன்பேரில் தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் சிதம்பரம் தாசில்தார் செல்வகுமார் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயிலுக்கு வந்து தீட்சிதர்களிடம் சம்பந்தப்பட்ட பதாகையை அகற்ற வேண்டும்.

பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நடராஜர் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பதாகைகளை அகற்றாமல் அங்கிருந்து சென்றனர். இது குறித்து தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா கூறுகையில் அறிவிப்பு பலகையை எடுக்க சொல்லி தீட்சிதர்களிடம் கூறியபோது மறுத்து விட்டனர். மேலும் என்னை பணி செய்ய விடாமல் தடுத்தனர் என்றார்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் ஏறி வழிபட தீட்சிதர்கள் தடை: அதிகாரிகளுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: