நிமிடத்துக்கு நிமிடம் குறைந்த ஆக்சிஜன் அளவு 100 உயிரை காப்பாற்றிய பிரார்த்தனை: டெல்லி மருத்துவமனையில் நடந்த திக்திக்

புதுடெல்லி: நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் டெல்லியும் உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிர் இழப்புகள் இங்கு அதிகமாகி வருகிறது.  டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் இருதினங்களுக்கு முன் 25 நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்த சம்பவம், நாட்டையே உலுக்கியது. அந்த சோகம் மறையும் முன்பாக நேற்று முன்தினமும் ஜெய்ப்பூர் கோல்டன் மருந்துமனையிலும் 20 நோயாளிகள் இறந்தனர். இதனால், டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 100 கொரோனா நோயாளிகள், நேற்று மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பினர். இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் ஆக்சிஜன் கையிருப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. விரைவில் சப்ளை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த டாக்டர்கள், நேரம் கடக்க கடக்க பீதி அடைந்தனர். நோயாளிகளின் குடும்பத்தினரும் பதற்றம் அடைந்தனர். ஆக்சிஜன் சப்ளை செய்வதாக ஒப்புக் கொண்ட நிறுவனத்துக்கும், அரசுக்கும் உதவிகள் கேட்டு போன் அழைப்புகள் பறந்தன.

ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்தால் நோயாளிகள் சில நோயாளிகள் மூச்சு விட முடியாமல் திணறினர். மருத்துவமனைக்கு வெளியே இருந்த நோயாளிகளின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க, கடவுளிடம் வேண்டினர். அந்த நேரத்தில்தான், ஆக்சிஜன் ஏற்றிய டேங்கர் லாரி மருத்துவமனை உள்ள தெருவுக்குள் நுழைந்தது. இதை பார்த்ததும் கடவுள் தங்களுக்கு கண் திறந்து விட்டதாக மகிழ்ந்தனர். ஆனால், மருத்துவமனைக்கு வந்த ஆக்சிஜன் டேங்கர் லாரியால், உள்ளே செல்ல முடியவில்லை. அதற்கு காரணம், அங்கிருந்த சிறிய வாயில்தான். உடனடியாக, ஜேசிபி இயந்திரம் அவசரமாக அழைக்கப்பட்டது.

அது வந்ததும் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடித்து தள்ளப்பட்டு, டேங்கர் லாரி உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. ஆக்சிஜன் டேங்க் உடனடியாக நிரப்பப்பட்டு, நோயாளிகள் அனைவருக்கும் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.. இந்த சம்பவத்தால், அங்கு நிமிடத்துக்கு நிமிடம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இதேபோல், கங்காராம் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் 130 நோயாளிகள் மூச்சு திணறும் நிலை ஏற்பட்டது. ஆனால், சிறிது நேரமானாலும் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு, நோயாளிக்கு வழங்கப்பட்டது.  

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

டெல்லியில் கொரோனா தொற்று தீவிரமானதால் அங்கு முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மேலும் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். ‘டெல்லியில் கடந்த 21ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வராததால், இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. மே 3ம் தேதி காலை 5 மணி வரை இது அமலில் இருக்கும்,’ என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: