×

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் முதல் மேற்கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த கணக்கெடுப்பில் பொதுமக்களின் சாதி விவரங்களையும் சேர்ப்பது குறித்து ஒன்றிய அரசு விவாதித்து வருவதாகவும், ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த மனமாற்றம் வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. அதனால் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல பத்தாண்டுகளாக நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்கான பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட முன்னெடுப்புகளும், அதன் பயனாக கடந்த காலங்களில் ஆட்சியாளர்களிடமிருந்து பெற்ற உத்தரவாதங்களும் குறிப்பிடத்தக்கவை.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புகாக திரட்டப்படும் புள்ளிவிவரங்களுடன் சாதி என்ற ஒரே ஒரு பிரிவை சேர்த்தால் மட்டும் போதுமானது. இதற்காக எந்த கூடுதல் செலவும் ஏற்படாது. மாறாக, சாதிவாரி விவரங்கள் திரட்டப்படுவதால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும் பயன்கள் எல்லையில்லாதவை. சமூகநீதியை வழங்குவதில் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உச்சவரம்பை உடைக்க இந்த விவரங்கள் உதவும்.

எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி விவரங்களை திரட்டுவது குறித்து விவாதித்து வரும் ஒன்றிய அரசு, அதில் சமூகநீதிக்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை ( கேஸ்ட் சர்வே) எடுக்க வேண்டும் என்பதால் அதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : SATIWARI ,RAMADAS ,Chennai ,Bamaka ,India ,Ramdas Emphasis ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற...