×

திருப்பதி கோயில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு பசுநெய் என்ற பெயரில் பாமாயிலுடன் ரசாயனம் கலந்து விற்று ரூ.240 கோடி மோசடி: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் தகவல்

திருமலை: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் தயார் செய்யவும், பூஜைகளுக்கும் தூய்மையான பசு நெய் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் பல லட்சம் லிட்டர் நெய் தேவஸ்தானம் டெண்டர் முறையில் பெற்று பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் கலப்பட நெய் சப்ளை செய்ததாக உத்திரபிரதேசத்தை சேர்ந்த போலேபாபா டெய்ரி நிறுவனத்தை தேவஸ்தான நிர்வாகம் மீண்டும் டெண்டரில் பங்கேற்காத வகையில் கருப்பு ( பிளாக் லிஸ்ட்டில் ) பட்டியலில் சேர்த்தது. இதனால் போலேபாபா டெய்ரி இயக்குநர்கள் பமில்ஜெயின், விபின்ஜெயின், திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி முகவரியை கொண்ட வைஷ்ணவி டெய்ரி நிறுவனங்களுடன் நெய் விநியோகிப்பதற்கான டெண்டர்களை திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து போலேபாபா டெய்ரி நிறுவனம் பெற்றது. இந்த 2 டெய்ரி நிறுவனங்களும் தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கும் அளவு திறனைக்கொண்டிருக்கவில்லை. இருப்பினும் போலேபாபா டெய்ரி நிறுவனம் போலி ஆவணங்களுடன் அப்போது ஆட்சியில் இருந்த ஆளும் கட்சி மற்றும் தேவஸ்தான அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஒப்பந்தத்தை பெற்றதாக கூறப்படுகிறது. டெண்டர்களை பெறுவதற்கான தொகை போலேபாபா டெய்ரியின் கணக்கிலிருந்து ஏ.ஆர் டெய்ரியின் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டது.

ஏ.ஆர் டெய்ரி மற்றும் வைஷ்ணவி டெய்ரி ஆகியவை தேவஸ்தானத்திடம் இருந்து டெண்டரை பெற்றாலும், கலப்பட நெய் டேங்கர்கள் போலேபாபா டெய்ரியிடமிருந்து வந்துள்ளது. இதற்காக ஏ.ஆர் மற்றும் வைஷ்ணவி டெய்ரிக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் ₹3 கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில் நெய் டெண்டர் கிடைக்க உதவிய சில தேவஸ்தான அதிகாரிகளுக்கும் கமிஷன் சென்றுள்ளதாக புகார் எழுந்தது.
இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய இ.ஓ. ஷியாமலாராவ் வந்த பிறகு ஏ.ஆர் டெய்ரி வழங்கிய 4 லாரி டேங்கர் நெய் தரம் குறைந்ததாக கூறி திருப்பி அனுப்பினர். இருப்பினும், டேங்கர்களில் உள்ள சீல்கள் அகற்றப்பட்டு, அந்த டேங்கர்களில் உள்ள கலப்பட நெய் வைஷ்ணவி டெய்ரி மூலம் தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கலப்பட நெய் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை ஏற்பாடு செய்தது. இதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்து சிபிஐ இயக்குனர் தலைமையில் பிரத்யேக சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. இந்த விசாரணை குழு கடந்த நான்கு மாதங்களாக திருப்பதியில் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் உள்ளவர்களுகுள் ஜாமீன் கேட்டு ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ வழக்கறிஞர் பி.எஸ்.பி சுரேஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார். அதில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மட்டுமல்ல, ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காணிப்பாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், விஜயவாடா கனகதுர்கா, துவாரகா திருமலை, பெனுகாஞ்சிப்ரோல் திரெபதம்மா கோயில்களுக்கு பிரசாதம் தயாரிப்பதற்காக கலப்பட நெய் வழங்கப்பட்டுள்ளது. பசு நெய் என்ற பெயரில் பசு நெய் போல தோற்றமளிக்க பாமாயிலில் ரசாயனங்கள் கலந்து பிரசாதங்கள் தயார் செய்ய இந்த நெய் சப்ளை செய்யப்பட்டுள்ளது. போலேபாபா டெய்ரி இயக்குநர்கள் பமில்ஜெயின், விபின்ஜெயின் இணைந்து பல்வேறு பால் டெய்ரி நிறுவனங்களின் பெயரில் 60 லட்சம் கிலோ போலி நெய்யை சப்ளை செய்து ₹240 கோடிக்கு மேல் ஆதாயம் அடைந்துள்ளனர்.

மேலும் வழக்கின் சாட்சியான சஞ்சய் ஜெயின் என்பவர் ஏப்ரல் 7ம் தேதி டெல்லியில் இருந்து திருப்பதிக்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது, கலப்பட நெய்யை சப்ளை செய்தவர்கள் அவரை மிரட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆஷிஷ்ரோஹில்லா நீதிபதி முன் குற்றத்தை ஒப்புக்கொள்ளத்தயாராக இருந்த நிலையில், ரோஹில்லாவுக்கு தெரியாமல், மற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் அவரது பெயரில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த சூழலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ வழக்கறிஞர் வாதாடினார். இதனை கேட்ட நீதிபதி கே. ஸ்ரீனிவாஸ்ரெட்டி போலேபாபா டெய்ரி இயக்குநர்கள் பமில்ஜெயின் மற்றும் விபின்ஜெயின் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இந்த மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதேபோல் வைஷ்ணவி டெய்ரி தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா சாவ்டா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

 

The post திருப்பதி கோயில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு பசுநெய் என்ற பெயரில் பாமாயிலுடன் ரசாயனம் கலந்து விற்று ரூ.240 கோடி மோசடி: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirumala-Tirupathi Devasthanam ,Thirumalai ,CBI ,Court ,Tirupati Temple ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...