காவிரி ஆணைய உத்தரவுபடி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை

புதுடெல்லி: காவிரி பங்கீடு விவகாரத்தில் ஒழுங்காற்று குழு மற்றும் நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை பிறப்பித்த உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு காவிரியில் போதுமான தண்ணீரை திறக்க கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. காவிரி ஒழுங்காற்றுக்குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரை காவிரியில் வரும் 27ம் தேதி வரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளன. ஆனாலும், அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது.

இதையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்களின் குழு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதேப்போன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான அம்மாநில அனைத்து கட்சி எம்பிக்கள் குழு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேற்று சந்தித்து பேசினார்கள்.

இந்நிலையில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த அவசர வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, உமாபதி மற்றும் குமணன் ஆகியோர் வாதிடும் போது ,\” காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக தெளிவாக தீர்ப்பு வழங்கியிருந்தும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடகா அரசு தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா அணைகளில் உள்ள நீரை கணக்கிட்டால் தமிழ்நாட்டுக்கு சுமார் வினாடிக்கு 6,400 கன அடி தண்ணீரை திறந்து விடலாம். ஆனால் அதனை கர்நாடகா அரசு செய்யவில்லை.

இருப்பினும், காவிரி ஆணையம் கூறிய 5000 கன அடி தண்ணீரையாவது திறந்து விடுவார்கள் என்று பார்த்தால் அதற்கும் அம்மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதில் நீர் மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு ஆகியவை பிறப்பித்த எந்த ஒரு உத்தரவையும் கர்நாடகா அரசு பின்பற்றவில்லை. எங்களது கோரிக்கைகளை காவிரி ஆணையம் தொடர்ந்து படிப்படியாக குறைத்து கொண்டு தான் வருகிறது. அதாவது வினாடிக்கு 15000 கன அடி என்று முன்னதாக இருந்த நிலையில், 10000 கன அடி, 7200 கன அடி தற்போது 5000 கன அடி என எங்களுக்கு வழங்கும் தண்ணீரின் அளவு தொடர்ச்சியாக குறைக்கப்பட்டுள்ளது. இறுதியாக 2500 கன அடி நீர் தான் தர முடியும் என்று கர்நாடகா அரசு அடாவடித்தனமாக தெரிவித்து வருகிறது. இதில் கர்நாடகாவில் மழை பற்றாக்குறைவு இருக்கிறது என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அதற்காக அவர்களிடம் இருக்கும் நீரை கூட கொடுக்க மாட்டேன் என்றால் எப்படி? கர்நாடகா மாநிலத்திற்கு இதுபோன்று பிரச்னை என்றால், கடைமடை மாநிலமாக இருக்கும் எங்களுக்கு எவ்வளவு பிரச்னை இருக்கும். இதில் வறட்சியின் பாதிப்பு அவர்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் தான் உள்ளது. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ”மாநிலத்தில் போதிய மழை கிடையாது. மேலும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கே நீர் பற்றாக்குறையாக உள்ளது. போதிய நீர் இருப்பும் அணைகளில் கிடையாது. இதில் மழை நீரை அடிப்படையாக கொண்டு தான் தண்ணீர் திறந்து முடியும் என்பதால், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் வேண்டுமானால் காவிரியில் இருந்து திறக்க முடியும். இதில் தமிழ்நாடு விவசாய தேவைகளுக்காக தண்ணீரை கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் குடிநீருக்கே தண்ணீர் இல்லை என்கிறோம். இரண்டு எது பெரியது என்று பார்த்தால் குடிநீருக்கு தான் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டிய சூழல் இருக்கிறது என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை கண்டிப்பாக நிராகரிக்க முடியாது. ஏனெனில் நீர் பங்கீட்டை சரியாக கண்கானிக்கும் நிபுணர்கள் கொண்ட குழு அதில் இடம்பெற்றுள்ளனர். அதனால் அவை அனைத்தையும் நிராகரித்து விட்டு ஒரு அடிப்படை முகாந்திரம் இல்லாத உத்தரவை உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது. அதனால் இந்த விவகாரத்தில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும். அதில் எந்த நிபந்தனைகளும் வழங்க முடியாது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடி இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.

அதே போன்று, கர்நாடகா மாநிலத்தின் நீர் நிலவரம், உன்மைத்தன்மை ஆகியவற்றை காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகியவை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், “காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்த தீர்ப்பு வழங்கினர்.

இதையடுத்து அப்போது மீண்டும் குறுக்கிட்ட கர்நாடகா அரசு தரப்பி வழக்கறிஞர்,” மேகதாது அணை தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திலாவது மேகதாது குறித்து ஆலோசிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கர்நாடகா அரசின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

The post காவிரி ஆணைய உத்தரவுபடி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: