×

மதமோதலை ஏற்படுத்த முயற்சி மதுரை ஆதீனம் மீது வழக்கு

சென்னை: சென்னை காட்டாங்கொளத்தூரில் கடந்த மே 3ம் தேதி அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக, மதுரை ஆதீனம், ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மதுரையில் இருந்து தனது காரில் சென்னை வந்தார். வரும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகே ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில், எந்த காயமுமின்றி அவர் தப்பினார். இதையடுத்து, சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், கார் விபத்து மூலம் தன்னை கொல்ல சதி நடந்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர், நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு குறிப்பிட்ட மதத்தினர் மோதியதாக கூறினார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஆதீனத்தின் குற்றச்சாட்டு தவறானது என விளக்கம் அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, விபத்து தொடர்பான சிசிடிவி ஆதாரத்தையும் வெளியிட்டு உண்மையை அம்பலப்படுத்தியது. இதுதொடர்பாக அயனாவரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் என்பவர் சென்னை காவல்துறை ஆணையருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கெட்ட உள்நோக்கோடு உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி, இந்து மற்றும் முஸ்லிம் மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வு மற்றும் பகையை தூண்டும் ஆதீனம் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து, உரிய தண்டனைப் பெற்று தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மீது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தீமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

The post மதமோதலை ஏற்படுத்த முயற்சி மதுரை ஆதீனம் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai Atheenam ,Chennai ,Saiva Siddhanta conference ,Kattankolathur, Chennai ,Harihara Gnanasambandha ,Desika Paramacharya ,Madurai ,Ulundurpet… ,Atheenam ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்