ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் திறக்க அனுமதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கருப்பு தினம் கடைப்பிடிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் தங்கள் வீடுகளில் எதிர்ப்பு கோலமிட்டு, கருப்புக் கொடியேற்றி கருப்பு தினம் கடைப்பிடித்தனர். கொரோனாவால் உயிரிழந்து வரும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளான்ட்டை திறக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இதை பண்டாரம்பட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கடுமையாக எதிர்த்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி அடுத்த பண்டாரம்பட்டி, மீளவிட்டான், கதிர்வேல் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வீடுகளின் முன்பு ‘‘ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்’’ என கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் அமமுக கட்சி அலுவலகம் உள்ளிட்ட பல வீடுகளிலும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கருப்பு தினம் கடைப்பிடித்தனர். பலர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வீட்டு முன்பு வைத்துள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ‘‘வாட்ஸ் அப் டிஸ்பிளே’ பிக்சரில் கருப்பு பொட்டு வைத்து தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

* துப்பாக்கி சூட்டில் பலியானோர் படத்துடன் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பலியானோரின் படங்களை வைத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். பின்னர் இது குறித்த மனுவை கலெக்டர் செந்தில்ராஜிடம் அளித்துச் சென்றனர். மனுவில், தூத்துக்குடியில் அறவழியில் போராடிய எங்களின் உறவுகளை காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டால், தடியடியால் இழந்து தவிக்கிறோம். 13 பேரை துடிதுடிக்க படுகொலை செய்து, உடல் உறுப்புகளை சிதைக்க காரணமாக இருந்த ஆலையை மூடும் வரை மறக்கவும், மன்னிக்கவும் முடியாது என தெரிவித்துள்ளனர்.

Related Stories: