வெண்கல பதக்கம் வென்ற இந்தியா; ஹாக்கிக்கு அதிக ஆதரவு கொடுங்கள்: கேப்டன் ஹர்மன்ப்ரீத் உருக்கம்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா நேற்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. கடந்த ஒலிம்பிக்கிலும் வெண்கலம் வென்ற இந்தியா இந்த முறை அந்த பதக்கத்தை வென்றிருக்கிறது. இதுபற்றி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கூறுகையில், உலகில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். ஹாக்கி போட்டிகளில் இந்தியா ஏற்படுத்தியுள்ள வரலாறு மிகவும் பெரியது. மீண்டும் நாங்கள் முதல் இடத்திற்கு வர முயற்சி செய்தோம். ஹாக்கி போட்டிகளுக்கு இன்னும் அதிகம் ஆதரவு கொடுங்கள். நிச்சயமாக நாங்கள் அடுத்த ஒலிம்பிக்கில் இதைவிட மிகவும் சிறப்பான ஆட்டத்தை கொடுப்போம் என்பதை நான் உறுதி அளிக்கிறேன். இந்திய அணி தங்கம் வெல்லும் என்று நாடே நம்பிக்கை வைத்தது. அதற்காக நாங்கள் கடுமையாக போராடினோம். இருப்பினும் எங்களால் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருப்பினும் நாங்கள் பதக்கம் வென்று நாடு திரும்ப உள்ளோம்.

இது இந்தியாவுக்கு முக்கியமான சாதனை’’ என்றார். இந்த வெற்றியுடன் இந்திய கோல்கீப்பர் ஜேஷ் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கூறுகையில், “ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் முடிக்க இதுவே சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வெறுங்கையுடன் வீட்டிற்குச் செல்லவில்லை, அது ஒரு பெரிய விஷயம். நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்பிய மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால் சில முடிவுகள் கடினமானவை, எனினும் சரியான நேரத்தில் ஒரு முடிவை எடுப்பது சூழ்நிலையை மிகவும் அழகாக்குகிறது. இதனால் நான் ஓய்வு முடிவில் தொடர்கிறேன். இதை மாற்றிக்கொள்ள மாட்டேன், தமிழகத்தில் இருந்து தான் எனது ஹாக்கி பயணம் தொடங்கியது. தமிழக ஹாக்கிக்கு நன்றி, என்றார். இந்நிலையில் அவரை ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமித்து ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

 

The post வெண்கல பதக்கம் வென்ற இந்தியா; ஹாக்கிக்கு அதிக ஆதரவு கொடுங்கள்: கேப்டன் ஹர்மன்ப்ரீத் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: