×

மக்களவை தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.1494 கோடி வாரி இறைத்த பாஜ: ரூ.620 கோடி மட்டுமே செலவிட்ட காங்கிரஸ்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 32 தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் தேர்தலுக்கு கட்சிகள் ரூ.3,352 கோடி செலவிட்டுள்ளன என்பது தெரியவருகிறது. மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக பாஜ கட்சி ரூ.1494 கோடி செலவிட்டுள்ளது. இது மொத்த கட்சிகளின் தேர்தல் செலவினங்களில் 44.56 % ஆகும். அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடி (18.5%) செலவிட்டுள்ளது. தேசியக் கட்சிகள் ரூ.2,204 கோடிக்கும் (65.75%) அதிகமாகச் செலவிட்டன.

அதேபோல தேர்தலுக்காக வசூலிக்கப்பட்ட மொத்த நிதியில், தேசிய கட்சிகள் ரூ.6,930.24 கோடி (93.08%) வசூலித்தன.மாநில கட்சிகள் ரூ.515.32 கோடி (6.92%) வசூலித்தன. மொத்த செலவில் ரூ.2,008 கோடி (53%) விளம்பரத்துக்கு செலவிட்டன. பயணச் செலவுகள் ரூ.795 கோடி. வேட்பாளர்களுக்கு ரூ.402 கோடி செலவிடப்பட்டது. கட்சிகள் டிஜிட்டல் பிரசாரங்களுக்காக ரூ.132 கோடிக்கும் அதிகமாகவும், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து விளம்பரம் வெளியிட ரூ.28 கோடியை செலவிட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் விளம்பரத்துக்கான மொத்த செலவில், ரூ.1,511.30 கோடி( 75.25%) தேசிய கட்சிகளால் செலவிடப்பட்டது. ரூ.496.99 கோடி(24.75%) மாநில கட்சிகளால் செலவிடப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.1494 கோடி வாரி இறைத்த பாஜ: ரூ.620 கோடி மட்டுமே செலவிட்ட காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : BJP ,Lok Sabha election campaign ,Congress ,New Delhi ,Lok Sabha elections ,Democratic Reforms Association ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மெஸ்ஸி வருகையால் வெடித்த கலவரம்;...