பாஜகவின் உருட்டலுக்கு அதிமுக பயப்படாது: மிரட்டல் விடுத்த ராம சீனிவாசனை கண்டித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு

சிவகங்கை: பாஜக உடன் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்த பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசனை கண்டித்து சிவகங்கையில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அண்மையில் பேட்டியளித்த ராம சீனிவாசன் பாஜகவினர் அதிமுகவினரை சாதாரணமாக கருதுவதாகவும், ஆனால் பாஜக அப்படி இல்லை என்பதை தேர்தலுக்கு பின் தெரிந்து கொள்வார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அதிமுக தங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை என்றால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்த அவர் பின் நாளில் அரசியல் ரீதியாக மிகவும் வருத்தப்படுவார்கள் என்று எச்சரித்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாட்டில் உள்ள 13 விழுக்காடு சிறுபான்மையினர் வாக்குகளில் 1% வாங்குவதே பெரிய விஷயம் என்று ராம சீனிவாசன் கூறியிருந்தார். 2019, 2021 தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி வைத்து கொண்டு இப்போது பசுந்தோள் போர்த்திய புலி போல போனால் நம்பிவிட மக்கள் முட்டாள் இல்லை என்றும் அதிமுகவை அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ராம சீனிவாசன் பாஜகவை கண்டித்து சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் பாஜக எனும் பூனையின் உருட்டலுக்கு எலி வேண்டும் என்றால் பயப்படலாம் அதிமுக எனும் புலி பயப்படாது என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

The post பாஜகவின் உருட்டலுக்கு அதிமுக பயப்படாது: மிரட்டல் விடுத்த ராம சீனிவாசனை கண்டித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: