×

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேட் பயன்படுத்த தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்துக்கும், ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ந்து கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது. இதுவரை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பதில் மனுதாக்கல் செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினர். ஆனால், அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாதிட்டார்.

அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு பட்டியலுக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். அப்போது நீதிபதி, எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்க தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், நான்கைந்து மாதங்களில் எம்.பி தேர்தல் வரவுள்ளது.

இந்த நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார். எங்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கிறார். பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேட் பயன்படுத்த தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Chennai High Court ,Chennai ,Chennai iCourt ,
× RELATED நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப்...