மதுரை: மதுரையில் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றும் வகையில் திட்ட பணிகள் நடந்து வரும் வண்டியூர் கண்மாய்க்கு மழைநீர் கால்வாய்கள் மூலம் அதிகளவில் கழிவுநீர் வந்து சேருவது கண்டறியப்பட்டு, இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் வேகப்படுத்தியுள்ளது. மதுரை நகரின் ஒரே நீராதார பெருமைக்குரியதாக வண்டியூர் கண்மாய் விளங்கி வருகிறது. 500க்கும் அதிக ஏக்கர் பரப்பல் விரிந்திருந்து 350 ஏக்கர் அளவிற்குள் சுருங்கி போன இக்கண்மாய், இப்பகுதி மக்களுக்கான நிலத்தடி நீர்மட்டத்திற்கு மிக முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. பொதுப்பணி துறைக்கான இக்கண்மாயை இயற்கை எழில் பொங்கும் பொழுதுபோக்கு நீர்நிலை சுற்றுலா தலமாக்கும் வகையில் ரூ.பல கோடி செலவில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. சாத்தையாறு அணை நிரம்பி அதிலிருந்தும், பல்வேறு பகுதிகளின் சிறு கண்மாய்கள் நிறைந்தும் வெளியேறும் மழைநீர் மதுரை வண்டியூர் கண்மாயை வந்தடையும் வகையில் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த கால்வாய்களின் பெரும் பகுதி கழிவுநீர் கண்மாயை வந்தடைவதாக புகார் எழுந்துள்ளது.
அதிகபட்சமாக 10 வார்டுகளுக்கு ஓரிடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, தனியார் ஒப்பந்ததாரர் பராமரிப்பில் விடப்பட்டுள்ளது. குறிப்பாக புதூர் கற்பக நகர், சர்வேயர் காலனி 120 அடி ரோடு, அண்ணாநகர் பகுதி உள்ளிட்ட அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுத்திகரித்து வெளியேற்றப்படும் தண்ணீர் தனி குழாய்கள் மூலம் சக்கிமங்கலம் கல்மேடு கழிவுநீரேற்று நிலையத்தை சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் ஒப்பந்ததாரர்கள் சிலர் கழிவுநீரேற்று நிலையங்களில் மோட்டார்களை இயக்கி சுத்திகரிப்பு செய்து அனுப்பாமல், வண்டியூர் கண்மாய்க்கு மழைநீர் செல்லும் கால்வாய்களில் நேரடியாக கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். இதுதவிர மருத்துவமனைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், குடியிருப்புவாசிகள் என பலரும் தங்கள் பகுதி கழிவுநீரை நேரடியாக கண்மாய்க்கான மழைநீர் கால்வாய்களில் திறந்து விடுகின்றனர். இதனால் கண்மாய்க்கு அதிகளவில் அபாயகரமான மருத்துவ கழிவு உள்ளிட்ட இதர கழிவுகள் வந்து சேர்வதாக புகார் இருக்கிறது. மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து வண்டியூர் கண்மாயை சென்றடைவது இக்கண்மாயில் நிறைவேற்றப்பட்டு வரும் சுற்றுலா தலமாக்கும் திட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அத்தோடு கண்மாய் மீன்கள் மட்டுமல்லாது, புழுக்கள், பூச்சிகள், பறவைகள், பொதுமக்கள் பாதிப்பர். சுகாதார சீர்கேட்டிற்கு வழவகுப்பதுடன், கண்மாயை வந்டையும் கழிவுநீரின் ‘மகிழி’யானது, கண்மாயை சுற்றிய பகுதிகளுக்கு செல்லும் ஊற்று கண்களை அடைபட செய்து நிலத்தடி நீர்மட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, வறட்சிக்கு வழி வகுத்து விடும். இதுகுறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது: வண்டியூர் கண்மாயில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு நடவடிக்கையாக முதல்கட்டமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கண்காணித்து விதிமீறல் கண்டறியப்பட்டால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் என விதிமீறல்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே தூர்வாரப்பட்டிருப்பினும், மழை காலம் துவங்குவதை கருத்தில் கொண்டு கால்வாய்களை சீரமைத்து மழைநீர், அணைநீர் மட்டுமே கால்வாய்கள் மூலம் வண்டியூர் கண்மாயை சேரும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறினர்.
The post சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார் appeared first on Dinakaran.