ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு அமலாக்கத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஜாமீன் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுவில், உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து பதில்மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் கோரிக்கை விடுத்தார். செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜி இன்னும் முழுமையாக குணமடையவில்லை. மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார் என்று கூறி மருத்துவர்கள் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறைக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு அமலாக்கத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: