ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் மனு வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தரும் மனு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தரப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் விதிகளை மீறி, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அதை செயல்படச் செய்ததாக ஊழியர் சங்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோர் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர்.

இதன் அடிப்படையில், கருப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கில் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அதை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், துணைவேந்தராக 2021 ஜூலை மாதம் பொறுப்பேற்றபோது நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் இருந்தது. அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்தேன். தொலைதூரக் கல்வி பிரிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் செய்ததால் எழுந்த கடும் எதிர்ப்பையும் உயிருக்கு அச்சுறுத்தலையும் மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். அரசின் அனுமதி இல்லாமல் ஓர் அமைப்பை தொடங்கியதாக கூறுவது தவறு. அரசு துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றுத்தான் அந்த அமைப்பு தொடங்கப்பட்டது. எனவே, தன்மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

The post ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் மனு வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தரும் மனு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: