- ஜல்லிக்கட்
- அவன்யபுரா
- பாலமேடு
- சூரையூர்
- ஆலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு
- மதுரை
- பொங்கல் திருவிழா
- Avaniapuram
- எருதுகள்
- அஞ்யபுரம், பாளமேடு, சூரியூர்
- டிர்
- Alanganallur
- ஜல்லிக்கட்டு
- தின மலர்
மதுரை: பொங்கல் திருவிழாவையொட்டி அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 2,315 காளைகள் களமிறக்கப்பட்டன. காளைகளை 1,293 வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். இந்த போட்டிகளில் போலீசார், பொதுமக்கள், வீரர்கள் என 166 பேர் காயமடைந்தனர். சிறந்த வீரர், காளைகளுக்கு முதல்வர் சார்பில் கார் பரிசு அளிக்கப்பட்டது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்டும். பொங்கலன்று மதுரை அவனியாபுரம், மாட்டுப்பொங்கலன்று பாலமேடு, ஜனவரி 17ம் தேதி (இன்று) அலங்காநல்லூர் என வரிசையாக நடத்தப்படும். நடப்பாண்டிற்கான ஜல்லிக்கட்டு, பொங்கல் நாளான நேற்று முன்தினம், மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது.
இதில் 817 காளைகள் களமிறக்கப்பட்டன. 435 வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள் போட்டிப்போட்டு காளையை அடக்கினர். இதில், அதலை கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் என்ற மாடுபிடி வீரருக்கு மாடு குத்தி குடல் சரிந்தது. மொத்தம் 18 வீரர்கள், காளை உரிமையாளர்கள் 24 பேர், போலீசார், பொதுமக்கள் உள்ளிட்ட 48 பேர் காயமடைந்தனர். போட்டியில் அவனியாபுரத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் 17 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வானார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார், வெற்றிக்கோப்பை, சான்றிதழை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினர். சிறந்த காளையின் உரிமையாளரான அவனியாபுரம் ஜி.ஆர்.கார்த்தி சதீஸ்குமாருக்கு, முதல் பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார், கன்றுடன் கூடிய பசு மாடு பரிசு வழங்கப்பட்டது.
பாலமேடு: மாட்டுப்பொங்கல் தினமான நேற்று மதுரை மாவட்டம், பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 7 மணியளவில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து மதுரை கலெக்டர் சங்கீதா தலைமையில், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலையில், அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். எம்எல்ஏ பூமிநாதன், மதுரை எம்பி சு.வெங்கடேசன், நடிகர் சூரி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், டிஐஜி ரம்யா பாரதி, மதுரை எஸ்பி டோங்க்ரே பிரவின் உமேஸ், தேனி எஸ்பி சிவபிரசாத், டிஆர்ஓ சக்திவேல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாடிவாசல் வழியாக 7 கோயில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு காளைகள் தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து திமிலை உயர்த்தியபடி சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் வெகு தீரத்துடன் அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல், போக்கு காட்டி களத்தில் நின்று விளையாடின. சுற்றுக்கு 100 காளைகள், 70 வீரர்கள் என களமிறங்கி விளையாடினர். மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. மொத்தம் 10 சுற்றுகளில், 840 காளைகள் களமிறங்கின. 500 வீரர்கள் ஆக்ரோஷமாக அடக்க பாய்ந்தனர்.
மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 14 காளைகள் அடக்கி முதலிடம் பிடித்தார். இவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. சின்னப்பட்டி தமிழரசன் 11 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்தார். இவருக்கு சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் சார்பில் டூவீலர் வழங்கப்பட்டது. கொந்தகையை சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி 3ம் இடம் பிடித்தார். சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராயவயல் மாரிமுத்துவின் ராக்கெட் சின்ன கருப்பு காளை முதலிடம் பிடித்தது. மாரிமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. 2வது இடத்தை தேனி மாவட்டம் கோட்டூர் அமர்நாத் காளை பிடித்து, இந்த காளைக்கு சமூக ஆர்வலர் பொன்குமார் வழங்கும் நாட்டு பசு மாடு பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் வீரர்கள், காளைகளுக்கு தங்கக்காசு, கட்டில், பீரோ, அண்டா, கிரைண்டர், மிக்சி, சைக்கிள், வேட்டி, துண்டு ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண உள்ளூர் மட்டுமல்லாது, வெளிமாவட்டத்தினர், வெளிமாநிலத்தினரும் ஏராளமானோர் குவிந்தனர். பணியில் இருந்த ஒரு டிஎஸ்பி விஜயராஜன், இரு எஸ்ஐகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 46 பேருக்கு காயம் ஏற்பட்டது.
சூரியூர்: திருச்சி அருகே உள்ள பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் வீரர்கள் உறுதி மொழி ஏற்ற பின், காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி ெதாடங்கியது.
இதில் 658 காளைகள், 358 வீரர்கள் களம் கண்டனர். களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் ஓடாமல் களத்திலேயே சிறிது நேரம் நின்று வீரர்களுக்கு தண்ணி காட்டியது. காளைகள் முட்டியதில் வீரர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர் 32 பேர், பார்வையாளர்கள் 20 பேர், பாதுகாப்பு பணியில் இருந்த திருவெறும்பூர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ், துவாக்குடி போக்குவரத்து ஆர்ஐ ரத்தினம் உள்பட 72 பேர் காயமடைந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு என ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் அதிக காளைகளை அடக்கிய நாமக்கல்லை சேர்ந்த கார்த்திக் என்ற வீரருக்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன், பைக் பரிசாக வழங்கினார். அதேபோல் சிறந்த காளையாக இலந்தப்பட்டியை சேர்ந்த தமிழ் என்பவரது காளைக்கு வீட்டுமனை முதல் பரிசாகவும், இரண்டாவது செங்குறிச்சியை சேர்ந்த கருப்பையா என்பவரது காளைக்கு தங்க மோதிரமும், மூன்றாவது பரிசாக நரியப்பட்டி சேர்ந்த தனபால் என்பவரது காளைக்கு 10 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திருச்சி எஸ்.பி வருன்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்: உலகப்புகழ் ஜல்லிக்கட்டு பெருமைக்குரிய மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். போட்டி காலை 7 மணி அளவில் கோட்டை முனியசாமி வாடிவாசல் திடலில் தொடங்குகிறது. ஆன்லைன் மூலம் பதிந்து தேர்வான 1,100 காளைகள் பங்கேற்கின்றன. 660 மாடுபிடி வீரர்களும் களமாடுகின்றனர்.
* காளை வளர்த்த சிறுமிக்கு தங்கக்காசு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ரூ.25,000 பரிசுத் தொகை அறிவித்த காளையை அடக்கிய, திண்டுக்கல் மாவட்டம், பழநி சிவா என்ற மாடுபிடி வீரருக்கு ரொக்கப் பரிசு களத்திலேயே வழங்கப்பட்டது. 13 வயது சிறுமி கனிமொழி வளர்த்த காளைக்கு அமைச்சர் பி.மூர்த்தி தங்கக்காசு வழங்கி பாராட்டினார்.
* தொடர்ந்து 3 ஆண்டாக முதலிடம் அரசு வேலை வழங்க கோரிக்கை
பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி கார் பரிசு வென்ற, மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு பரிசுகள் புதியதல்ல. ஏற்கனவே, கடந்த 2021ல் முதல்பரிசு, 2022ல் இரண்டாமிடம், 2023ல் முதலிடம், தற்போதும் முதலிடம் என தொடர்ச்சியாக பிரபாகரன் பரிசுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் போட்டியில் பங்கேற்பதில் சிரமம் இருந்தது. அடுத்த ஆண்டு இதில் தளர்வுகள் வழங்கிட வேண்டும். மிகுந்த போராட்டத்திற்கு பிறகே வெற்றி பெற்றேன். என்னை விட என் நண்பர்களே என் வெற்றியை கொண்டாடுகின்றனர். மாடுபிடித்து முதல்நிலை பிடிக்கிறவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கிட வேண்டும்’’ என்றார்.
The post அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 2,000 காளைகள்: தீரமுடன் அடக்கிய வீரர்கள்; போலீசார் உள்பட 166 பேர் காயம்; உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது appeared first on Dinakaran.