×

பேரவை தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி: ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி; காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த தேர்தலில் பாஜக அமைச்சர் தோற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியடைந்தார். ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சியை பிடித்தது. முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் மரணம் அடைந்ததால், ஸ்ரீகரன்பூர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த தொகுதியில் பாஜக சார்பில் சுரேந்திர பால் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இவர் பாஜக அரசில் அமைச்சராகவும் உள்ளார். இவரை எதிர்த்து குர்மீத் சிங் குனாரின் மகன் ரூபிந்தர் சிங் குனார் என்பவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 81.38 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

ஸ்ரீகரன்பூர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரும், அமைச்சருமான சுரேந்திர சிங்கை 12,570 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் குனார் வெற்றி பெற்றார். புதியதாக பாஜக ஆட்சி அமைக்கப்பட்ட சில வாரங்களில் நடந்த தேர்தலில், பாஜக வேட்பாளரும் அமைச்சருமான சுரேந்திர சிங் தேர்தலில் தோற்றது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பேரவை தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி: ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி; காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Assembly Elections ,Rajasthan ,BJP ,Congress ,Jaipur ,Legislative Assembly ,Chief Minister ,Bhajanlal Sharma ,Gurmeet Singh Goonar ,Rajasthan BJP ,
× RELATED அரியானா சட்டப்பேரவை தேர்தல்; 67 பா.ஜ...