ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் அஸ்பர்டேம் வேதிப்பொருளால் புற்றுநோய் அபாயம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் அஸ்பர்டேம் என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நமது உணவு பழக்க வழக்கங்கள் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததை போல் இல்லாமல், தற்போது முற்றிலும் மாறுபட்டு, நாகரிக வளர்ச்சி, சுவை, மனம், நிறம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பொருட்களை சேர்த்து உணவை நோய் வரவழைக்கும் ஒரு பொருளாக மாற்றியுள்ளோம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், எந்தவித நிறங்களும், சுவைகளும் சேர்க்காமல் அந்த காலத்தில் பரிமாறப்பட்ட உணவுகள் மனிதனின் உடலுக்கு ஏற்றது என்பதை நாம் இன்று வரை 90 வயதிலும் திடமாக உள்ள நமது முன்னோர்களின் உடல் நிலையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு நல்ல விஷயத்தில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ளும் நமது இளைய தலைமுறையினர் உணவு சார்ந்த விஷயத்தில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளாக பின்னோக்கி சென்றுள்ளனர் என்பதற்கு தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது வருவதும் ஒரு சான்று. இப்படி உணவு விஷயத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நாவிற்காக பல்வேறு தடை செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கலோரி அதிகம் நிறைந்த உணவுகள், இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள், சுவைக்காகவும், நிறத்திற்காகவும் கூடுதலாக மசாலாக்கள் மற்றும் கலர் பவுடர்களை சேர்க்கும் உணவுகள் என பல உணவு வகைகளை சாப்பிட்டு 30 வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் என பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஒவ்வொரு ஆராய்ச்சியின் முடிவிலும் கடந்த பல வருடங்களாக மனிதன் பயன்படுத்தி வந்த உணவு பொருட்கள் பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர். எதனால் தீங்கு விளைகிறது, எதை மனிதன் உட்கொண்டால் எது போன்ற நோய்கள் வரும் போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளை மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து மேற்கொண்டு, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காத நமது மக்கள் தொடர்ந்து மாலை நேரங்களில் பஜ்ஜி கடைகளிலும், பானி பூரி கடைகளிலும் கூட்டம் கூட்டமாக நின்று தங்களது நாவிற்கு தீனி போட்டு வருகின்றனர்.

யார் என்ன கட்டுரைகளை வெளியிட்டால் நமக்கு என்ன என்ற ரீதியில் அடுத்த தலைமுறையினர் சென்று கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பயணித்துக் கொண்டிருந்தால் வருங்காலங்களில் இளைய தலைமுறையினர் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகள் வரும் என தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் அஸ்பர்டேம் எனப்படும் வேதிப்பொருளில் புற்றுநோயை விளைவிக்கும் நச்சுத்தன்மை இருப்பதாக செய்திகள் வெளியாகின. முதலில் அஸ்பர்டேம் என்றால் என்ன என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அஸ்பர்டேம் என்பது வாசனையில்லாத வெள்ளை நிறத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏதுமற்ற ஒரு வகை இனிப்பூட்டி. இது இயற்கையான சர்க்கரையை விட இனிப்பு சுவை அதிகம் கொண்டது‌. சுகர் ப்ரீ. லோ கலோரி என்று அழைக்கப்படும் செயற்கை இனிப்புகள் அனைத்தும் இந்த அஸ்பர்டேம் மூலக்கூறுகளை கொண்டவைதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம். கார்பனேடட் குளிர்பானங்கள், சுவிங்கம் போன்றவற்றில் இந்த அஸ்பர்டேம் எனப்படும் இனிப்பூட்டி கலக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த அஸ்பர்டேம் எனப்படும் செயற்கை இனிப்பு குறித்து பலகட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் இந்த ஆராய்ச்சி குறித்து சர்வதேச புற்றுநோய் ஆய்வு நிறுவனமும், உணவு சேர்க்கைகளுக்கான ஐநா உணவு மற்றும் வேளாண் நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த கூட்டு நிபுணர் குழுவும் சேர்ந்து கடந்த ஜூலை 14ம் தேதி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதில், மனிதருக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடும் பொருட்களின் பட்டியலில் அஸ்பர்டேம் எனும் பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உட்கொள்வது பாதுகாப்பானது என்று அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களில் அஸ்பர்டேம் என்னும் பொருளை கலந்து பயன்படுத்த உலகில் சுமார் 100 நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அஸ்பர்டேம் எனும் உணவுப் பொருள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தீங்குகளை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையை பல நாடுகள் எதிர்த்தும் உள்ளன. குறிப்பாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை நிராகரித்த அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட மருந்து நிறுவனம், அஸ்பர்டேம் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அஸ்பர்டேம் ஆய்வு செய்யப்பட்ட உணவு பொருட்களில் இருந்து எடுக்கப்பட்டது, என அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட அளவு மட்டும் நிபந்தனையின் கீழ் இதனை பயன்படுத்துவதால் எந்த பிரச்னையும் இல்லை, என உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இயற்கையாக கிடைக்கும் சத்துமிக்க உணவு பொருட்களில் கூடுதலாக இதை சேர்த்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும். சுவை கூடும். நிறம் கூடும் என்று பல்வேறு பொருட்களை நல்ல ஆரோக்கியமான உணவில் கலந்து அதன் பிறகு ஒரு ஆராய்ச்சியை செய்து குறிப்பிட்ட உணவில் இதை கலந்தால் பிரச்னை ஏற்படும் என்று கூறி, மீண்டும் அந்த கலவையை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக தரமான உணவுகளை எந்தவித கலப்படங்களும் இன்றி எடுத்துக் கொண்டால் நம் முன்னோர்கள் கூறியபடி 90 வயதிலும் தடி ஊன்றாமல் நடக்கலாம் என்பதை இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும், என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

அஸ்பர்டேம் எனும் இனிப்பூட்டி குறித்து பெரம்பூரை சேர்ந்த குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெள்ளை சர்க்கரையையே மருத்துவர்கள் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். ஏனென்றால் அதுவும் மனிதர்களுக்கு கெடுதலை தான் தருகிறது. இவ்வாறு சர்க்கரைக்கு மாற்று என தற்போது பல பொருட்கள் சந்தையில் வந்துள்ளன. ஆனால் மருத்துவர்கள் யாரும் அதனை நல்லது. வாங்கி பயன்படுத்துங்கள் என்று கூறுவது கிடையாது. தனிநபர் விளம்பரங்கள் மூலம் இவை மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு அதனை மக்கள் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணம் ஆகும்.

இவைகளை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது. அஸ்பர்டேம் என்னும் இனிப்பூட்டியை அளவுடன் பயன்படுத்த வேண்டும் என கூறுகிறார்கள். ஒரு சிறிய அளவிலான ஐஸ்கிரீம் அல்லது கேக் இதனை தயார் செய்யும் இடங்களுக்குச் சென்று பொதுமக்களால் பார்க்க முடியாது. மேலும் அனைத்து இடங்களையும் உணவு பாதுகாப்பு துறையினரால் அலசி ஆராய முடியாது. எனவே குறிப்பிட்ட ஒரு பொருளில் பிரச்னை உள்ளது என்று வந்துவிட்டால் அதனை மனிதர்கள் தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே வெள்ளை சர்க்கரையை சாப்பிட்டு தற்போது தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது. சர்க்கரைக்கு மாற்றாக கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெள்ளம், கருப்பட்டி, பனைவெல்லம், ரசாயனம் கலக்காத சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்தலாம். எனவே சர்க்கரைக்கு மாற்று என கூறும் பொருட்களை மருத்துவ உலகம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. எனவே அதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்,’’ என்றார்.

* கிட்னி பாதிக்கும்
சர்க்கரைக்கு மாற்று என கூறும் பொருட்களை சாப்பிடுவதால் இன்சுலின் அளவை அதிகப்படுத்தி விடும். இன்சுலின் என்பது பொதுவாக நமது உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன். இது நமது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரைக்கு மாற்றான இனிப்பூட்டிகளை சாப்பிடும் போது அது இன்சுலின் சுரப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தி இன்சுலினை நமது உடலில் வேலை செய்ய விடாமல் செய்துவிடும். இதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோயினால் ஏற்படும் பிரச்னைகள் மிக அதிகமாகி விடும். இதனால் கண் பார்வை மற்றும் கிட்னி உடனடியாக பாதிக்கப்படும்.

* அளவு மீறினால் நடவடிக்கை
அஸ்பர்டேம் எனும் பொருளை எவ்வளவு பயன்படுத்துவது என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அளவைவிட கூடுதலாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். உணவுப் பொருளை அழகுபடுத்துவதற்காக கலரும், சுவைக்காக சில பொருட்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்துமே கெமிக்கல் தான் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.

உதாரணத்திற்கு வீட்டில் கேசரி செய்தால் அது வெள்ளையாக இருந்தால் நிறைய பேருக்கு பிடிக்காது. இதனால் தேவையில்லாமல் நாம் அதில் ஒரு கேசரி பவுடரை கலந்து, அது ஆரஞ்சு நிறத்தில் வந்தவுடன் சாப்பிடுவோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இயற்கையாக கிடைக்கும் பொருளை விட்டுவிட்டு செயற்கை முறையில் நாம் ஒரு பொருளை கூடுதலாக அதனுடன் சேர்ப்பதால் தீங்கு வருகிறது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இதேபோன்று ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு வினிகர் போன்ற பொருட்களை பயன்படுத்துவார்கள் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும், என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* தவிர்ப்பது நல்லது
அஸ்பர்டேம் எனப்படும் இனிப்பூட்டியை பயன்படுத்துவது குறித்து சென்னையைச் சேர்ந்த உணவு பொருட்கள் பரிசோதனை நிபுணர் கூறுகையில், ‘‘உணவுப் பொருட்களில் கூடுதலாக சேர்க்கப்படும் அனைத்து பொருட்களிலும் கெமிக்கல் கலந்துள்ளது. எனவே அதனை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது. அனைத்து பொருட்களும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. ஆனால் பாதிப்புகள் வேறு ரூபத்தில் வரலாம். அஸ்பர்டேம் எனப்படும் பொருளை பயன்படுத்தக் கூடாது என இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் குறைவாக பயன்படுத்தும்படி தெரிவித்துள்ளனர். எனவே அதை பயன்படுத்துபவர்கள் அதை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால் நாங்கள் அதை தடுக்க முடியாது.

* அங்கீகரிக்கப்படவில்லை
அஸ்பர்டேம் குறித்த வெளியிட்ட செய்திக்காக உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிக்கு சர்வதேச செயற்கை இனிப்பூட்டிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. செயற்கை இனிப்பூட்டிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஹண்ட் வுட் கூறுகையில், சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையான ஐஏஆர்சி உணவுப் பாதுகாப்பு அமைப்பு அல்ல. அஸ்பர்டேம் பற்றிய கருத்துகள் அறிவியல்பூர்வமாக நிறுவப்படவில்லை. அந்த ஆராய்ச்சிகள் ஏதும் உணவு பாதுகாப்பு அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஐஏஆர்சியின் கருத்து வாடிக்கையாளர்களை பீதியடையச் செய்யும், என்றார்.

The post ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் அஸ்பர்டேம் வேதிப்பொருளால் புற்றுநோய் அபாயம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: