அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான வீரமணி. இவரது மனைவி ரமணா. இவர்களுக்கு 4 வயதில் தாரணி என்ற மகளும், 2 வயதில் ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர். ரமணா 7 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3வது குழந்தை வேண்டாமென நினைத்த ரமணா, கர்ப்பத்தை கலைக்க மருந்துக்கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரமணாவை உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு ரமணாவின் வயிற்றில் பெண் சிசு இறந்த நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து, தீவிர சிகிச்சைக்கு பின் குழந்தை அகற்றப்பட்டது. இதற்கிடையே ரமணாவுக்கு தொடர்ந்து ரத்த போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரமணா பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். கர்ப்பிணி பெண் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை உட்கொண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post அரியலூரில் சோகம்!: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.