அரக்கோணம் அருகே மாற்று சாலை அமைக்கும்போது 500 ஆண்டு பழமையான 3 கல்வெட்டுகள் கண்டெடுப்பு

*தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடிவு

அரக்கோணம் : அரக்கோணம் அருகே மாற்று சாலை அமைக்கும்போது 500 ஆண்டு பழமையான 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து நீர் வழிந்து செல்லும் கலங்கல் பகுதியில் பாறைகற்கள், படிக்கட்டுகள் போன்று பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏரியையொட்டி செல்லும் சாலையின் குறுக்கே சிறுபாலம் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது.

அப்போது, நீர் வழிந்து செல்லும் பாறைகற்கள் படிக்கட்டுகளில் எழுத்துக்கள் பதிக்கப்பட்ட கல்வெட்டு பாறைகள் இருந்ததை பார்த்தனர். சுமார் 500 ஆண்டு பழமையான 3 கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமாரி, விஏஓ விக்னேஷ் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். இதுகுறித்து, அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட தொல்லியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வெட்டுகளை மீட்டு தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். பின்னர், அந்த கல்வெட்டில் என்ன எழுதப்பட்டுள்ளது என ஆய்வு செய்யப்படும் எனவும் இதுகுறித்த முழு விவரங்கள் பின்னர் தான் தெரியவரும் எனவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

The post அரக்கோணம் அருகே மாற்று சாலை அமைக்கும்போது 500 ஆண்டு பழமையான 3 கல்வெட்டுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: