நெல்லையில் 2வது முறையாக ஆய்வு; மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: ஒன்றிய குழுவினர் பாராட்டு


நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18ம் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. நெல்லை ெகாக்கிரகுளம், வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஏற்கெனவே ஒன்றியக் குழுவினர் கடந்த மாதம் ஆய்வு செய்தனர்.அப்போது பல பகுதிகளில் வெள்ளம் வடியாததால் சேத மதிப்பை சரியாக கணக்கிட முடியவில்லை. இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு ஆலோசகர் கேபி சிங் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை வந்த கேபி சிங் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேற்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ், கலெக்டர் கார்த்திகேயன், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பாலங்கள், குடிநீர் திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து கலெக்டர் கார்த்திகேயன் வீடியோ காட்சிகளுடன் ஒன்றிய குழுவினருக்கு விளக்கினார். பின்னர் ஒன்றிய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து சென்றனர். அதில் ஒரு குழுவினர் கருப்பந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றுப் பாலத்தை கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் ஒரு குழுவினர் ஆய்வு செய்தனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடிநீர் குழாய்களையும் ஒன்றியக் குழுவினர் பார்வையிட்டனர். அப்போது ஒன்றியக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சக கூடுதல் இயக்குநர் பாலாஜி,‘மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு அரசு உண்மையாகவே சிறப்பாக செயல்படுகிறது,’என்றார். மற்றொரு குழுவினர் வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றுப்பாலம், அடித்துச் செல்லப்பட்ட குடிநீர் பைப்லைன்கள், சீவலப்பேரியில் சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை பார்வையிட்டனர், அதன் பின்னர் பாலாமடை, சுத்தமல்லி, தருவை ஆகிய பகுதிகளில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில் ஒன்றியக் குழுவினர் சேத மதிப்பீட்டு அறிக்கையை ஒன்றிய அரசிடம் விரைவில் சமர்ப்பிப்பர் என தெரிகிறது.

The post நெல்லையில் 2வது முறையாக ஆய்வு; மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: ஒன்றிய குழுவினர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: