ஒரு தேர்தலில்கூட வெற்றி பெற தகுதியில்லாதவர் அண்ணாமலை: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை: ஒரு தேர்தலில்கூட வெற்றி பெற தகுதியில்லாதவர் அண்ணாமலை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி காந்தி ஜெயந்தியன்று மரியாதை செலுத்த எந்த அருகதையும் இல்லை. அதிமுக-பாஜ இடையேயான உறவு முறிந்துள்ளது. இனி வரும் நாட்களில் என்னென்ன முறியுமோ என தெரியவில்லை. பாஜவை சவக்குழிக்கு அனுப்பும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். அண்ணாமலை அரசியல் முதிர்ச்சியற்ற தலைவர் என்பதை காட்டி வருகிறார்.

கோவை எம்.பி.யால்தான் கோவை வளர்ச்சி இல்லாத நகராக மாறிவிட்டது. கோவையில் தொழில் முடங்கியதற்கு அவர்தான் காரணம் என்று அண்ணாமலை சொல்லியுள்ளார். ஒரு தேர்தலில்கூட வெற்றி பெற தகுதியில்லாத அண்ணாமலை, கோவை தொகுதி எம்.பி.யை குறை சொல்ல தகுதியற்றவர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு அடிப்படையில் தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம்.

கோவை, மதுரை தொகுதிகளை இந்த தேர்தலிலும் கேட்டு பெற்று போட்டியிடுவோம். அகில இந்திய கட்சியான பாஜ தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என போராட்டம் நடத்துவது நியாயமா? பாஜ அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படுகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் பந்த் நடத்தப்படும். பாஜ பந்திற்கு கர்நாடக அரசு பணிவது ஏற்கக்கூடியது அல்ல. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

*வாச்சாத்தி வழக்கில் நடவடிக்கை எடுக்காதவர் ஜெயலலிதா
பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய பெருமை சிபிஎம் கட்சிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் உண்டு. இவ்வழக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம். ஏழை, பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதற்கு இந்த தீர்ப்பை அதிகாரிகள் படிப்பினையாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்’ என்றார்.

The post ஒரு தேர்தலில்கூட வெற்றி பெற தகுதியில்லாதவர் அண்ணாமலை: கே.பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: