ஆந்திர சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜ, ஜனசேனாவுக்கு 80 தொகுதிகள் ஒதுக்கீடு: அமைதியாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்த சந்திரபாபு

திருமலை: ஆந்திர சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக, ஜனசேனா கூட்டணிக்கு 80 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து சந்திரபாபு அமைதியாக பேச்சுவார்த்தை முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி இம்முறை பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்து களம் காண திட்டமிட்டுள்ளது. பாஜக கூட்டணிக்கு ஒதுக்க உள்ள சீட் குறித்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு சில நாட்களுக்கு முன்பே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நடிகர் பவன் கல்யாணுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் குறைந்த சீட்கள் கிடைக்கும் என்பதால் ஆந்திராவில் அதிக சீட்களை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவை பொறுத்தவரை மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகளும், 175 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு சந்திரபாபு டெல்லிக்கு சென்றபோது அங்கு பாஜக மேலிட தலைவர்களான உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரிடம் கூட்டணி சீட் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதாவது சட்டமன்ற தொகுதியில் பாஜக மற்றும் ஜனசேனாவுக்கு மொத்தம் உள்ள 175 சீட்களில் 70 சீட்கள் ஒதுக்குவதாகவும், எம்பி தொகுதிகளில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பாஜகவுக்கு 10 இடங்கள் அளிப்பதாகவும் சந்திரபாபு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அமித்ஷா உள்ளிட்டோர் ஏற்று கொண்டதாகவும் தெரிகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை சத்தமின்றி முடித்து விட்டு பாஜகவிடம் `ஓகே’ வாங்கிய பிறகே அவர் மகிழ்ச்சியுடன் ஆந்திரா திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு அடுத்தடுத்து வந்த அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் தற்போதைய ஆளும் ஜெகன்மோகன் அரசை முதன்முறையாக கடும் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

சந்திரபாபுவை பொறுத்தவரை அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகனை வீழ்த்தி ஆட்சிக்கு வருவதற்காக சந்திரபாபு தயாராகி விட்டார். அதற்கேற்ப பாஜக விரும்பும் தொகுதிகளை விட்டுக்கொடுக்கவும் தயாராகி விட்டார் என ஆந்திர அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

The post ஆந்திர சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜ, ஜனசேனாவுக்கு 80 தொகுதிகள் ஒதுக்கீடு: அமைதியாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்த சந்திரபாபு appeared first on Dinakaran.

Related Stories: