×

ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இயக்கப்படும் சேரன் விரைவு ரயில், சென்னை – திருவனந்தபுரம் மெயில், நீலகிரி விரைவு ரயில் , நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றில் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளைச் சேர்க்க தொடர்வண்டித்துறை முடிவு செய்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த நடைமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

விரைவுத் தொடர்வண்டிகளில் 7 முதல் 9 வரை முன்பதிவு செய்யக்கூடிய படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். இப்போது அவற்றில் இரு பெட்டிகள் நீக்கி விட்டு குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இதனால், பயணம் செய்வோரின் எண்ணிக்கைக் குறையாது என்றாலும் கூட, மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது ஏழை மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவதாக இருக்கும். தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கு செல்வதாக இருந்தாலும், பேருந்துகளில் வசூலிக்கப்படுவதைவிட தொடர் வண்டிகளில் படுக்கை வசதிக்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறைவு ஆகும். அதனால் தான் ஏழை மக்கள் தொடர் வண்டிகளில் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து கோவை செல்ல படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 325 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 3ஆம் வகுப்பு ஏசி பெட்டியில் இதே தொலைவுக்கு 835 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருநெல்வேலி செல்ல சாதாரண பெட்டிகளில் 395 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளில் 1,040 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி குளிரூட்டி வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும். சாதாரண வகுப்புகளுக்கான கட்டணத்தைவிட குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளுக்கான கட்டணத்திற்கு குறைந்த அளவே மானியம் வழங்கப்படுகிறது. குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதன் மூலம், அதிக வருவாய் ஈட்டலாம் என்ற எண்ணத்தில் தான் தெற்கு தொடர் வண்டித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. தொடர் வண்டித்துறை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இதில் இலாப நோக்கம் இருக்கக் கூடாது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில், விரைவுத் தொடர் வண்டிகளில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை தொடர் வண்டித்துறை கைவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post ரயிலில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : ANBUMANI RAMADAS ,Chennai ,Seran Rapid ,Thiruvananthapuram Mail ,Nilgiri Rapid Train ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்