ஆனைமலை: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான,பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்,கேரள மாநிலத்திலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அதிலும், அமாவாசை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த கோயிலில் கடந்த 2010ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 13 ஆண்டுகளை கடந்ததால்,ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், கும்பாபிஷேக விழா நடத்த, கோயில் விமானம் மற்றும் ராஜகோபுர திருப்பணியானது, கடந்த இரு மாதத்திற்கு முன்பிருந்து துவங்கி தற்போது பணிகள் தீவிரமாக நடக்கிறது.
இதற்கிடையே, ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதியாக, ரூ.3.15 கோடியில் ‘பக்தர்கள் ஓய்வு மண்டபம்’ கட்டும் பணி அன்மையில் துவங்கியது. இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் மருதமுத்து,தங்கமணி,திருமுருகன்,மஞ்சுளாதேவி உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர். மாசாணியம்மன் கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் நடக்கும் பக்தர்கள் ஓய்வு மண்ட கட்டுமான பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
The post ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ரூ.3.15 கோடியில் பக்தர்கள் ஓய்வு மண்டபம்: கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.