கூட்டணியை விமர்சித்து சர்ச்சையாக பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளருக்கு ரவிக்குமார், வன்னியரசு கண்டனம்

சென்னை: விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விசிக முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா இந்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது எனவும், திருமாவளவன் ஏன் துணை முதலமைச்சர் ஆக முடியாது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கு விசிக நிர்வாகிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, ‘‘கொள்கை புரிதல் இல்லாமல் கூட்டணி அறத்துக்கு எதிராக பேசி உள்ளார், அவரிடம் அவரது கட்சியினரே விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்று விமர்சித்தார். திமுக விடுதலை சிறுத்தைகள் கூட்டணி என்பது எண்ணிக்கையை அடிப்படையாக கொண்ட கூட்டணி அல்ல. அது கொள்கை கூட்டணி.

விடுதலை சிறுத்தைகள் இல்லை என்றால் வட மாவட்டங்களில் திமுகவால் வெல்ல முடியாது என்று ஆதவ் அர்ஜூனா கூறி இருப்பது உண்மைக்கு மாறானது. அரசியல் முதிர்ச்சியற்றது. தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெல்ல விடுதலை சிறுத்தைகள் உதவியது. அதுபோல, விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்.பிக்கள், 4 எம்.எல்.ஏக்கள் இருப்பது திமுக கூட்டணியால் தான் என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் தனி நபர்களை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ளாது.

தனி நபர்களை விமர்சிப்பதை ஆதரிக்கவும் செய்யாது. அது அவரின் தனிப்பட்ட கருத்து. விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்கிறது. எங்களின் தலைவர் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார் ஆகவே இதற்கு மேல் இந்த விவாதத்தை தொடர விரும்பவில்லை என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி, அவர் கருத்துக்கு விசிகவை சேர்ந்த பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கூட்டணியை விமர்சித்து சர்ச்சையாக பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளருக்கு ரவிக்குமார், வன்னியரசு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: