கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு அதிமுக மாஜி எம்எல்ஏ சஸ்பெண்ட்

திருப்பூர்: சேவூர் அருகே ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி கூட்டுறவு சங்க தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம் சேவூர் அருகே ஆலத்தூரில் சி.சி.2350 ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக 2013 முதல் அவினாசி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி இருந்து வருகிறார். இவர் மீது கடந்த 10 ஆண்டுகளாகவே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சங்கத்தின் கையிருப்புத் தொகையை சங்க துணை விதிகளுக்கு உட்பட்டு பேணப்படாதது, மாதந்தோறும் சங்க நிதியில் ரூ.2,365 செலவு மேற்கொண்டது, சங்க கடனுக்காக பணம் செலுத்திய உறுப்பினர்களுக்கு போலி ரசீதுகள் வழங்கியது, இ-சேவை மையத்தில் மிக குறைவாக சேவை வழங்கியது, சங்க ரொக்க புத்தகத்தில் வழக்கறிஞர் கார் வாடகை என்று செலவுத் தொகை ரூ.3 ஆயிரத்துக்கு ரசீது இல்லாமல் செலவு செய்தது, சங்கத்தின் மாதாந்திர வரவு செலவுகளின் துணை விதிப்படி அங்கீகரிக்காமல் நிர்வாக குழுவின் கடமைகளிலிருந்து தவறி செயல்பட்டது தெரியவந்தது.

மேலும் அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு லஞ்சம் பெற்றது, உறுப்பினரின் பங்குத்தொகை மற்றும் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வசூல் தொகை ரூ.4,045 ஆனதை உறுப்பினர் பங்கு அணாமத்து கணக்கில் பதிவேற்றம் செய்து தீர்மானம் இயற்றி அங்கீகாரம் செய்யத் தவறியது, தாட்கோ மத்திய காலக்கடனில் தவணை தவறிய கடன் தொகைகளை வசூல் செய்யாமல் சங்கத்திற்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது, உறுப்பினர்களுக்கு கே.சிசி கடன் வழங்குவதில் சொந்தக் காரணங்களுக்காக கால தாமதம் ஏற்படுத்தியது, தவறுகளை தட்டிக் கேட்பவர்களை பிசிஆர்புகார் செய்து விடுவதாக மிரட்டுவது போன்ற பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்கும் பட்சத்தில் சங்க செயல்பாட்டிற்கு குந்தகம் ஏற்படும் என்பதால் சங்கத்தலைவரான முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமியை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 75 (கி)ன் கீழ் சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மண்டல துணைப்பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

The post கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு அதிமுக மாஜி எம்எல்ஏ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: